பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

இளங்குமரனார் தமிழ்வளம் - 27 க

பணத்திற்கு நூற்றுக்கு ஆறு விழுக்காடு ஊதியம் ஆண்டுதோறும் வழங்கியபின் காப்பு நிதியில் இருந்த தொகையில் இருந்து விருப்ப ஊதியப் பங்குகளாக வழங்கப்பெற்றனவே இவை ஆகும். ஆதலால் ஒப்பந்த ஊதியத்தொகை வழங்கியதுபோக, ஒருபங்கு எடுத்தார்க்கும், நான்கு பங்கு முதலாக்கி வைத்த பொது அமைப்பு இப்புகழ் அமைப்பு என்பதை நினைவு கூர்வோர் பாராட்டாமல் இருக்க இயலாது. இவ் வகையில் கூட்டாக இயங்கும் பொது அமைப்பு களுக்குச் சீரிய எடுத்துக்காட்டாகத் திகழ்வது இக் கழக அமைப்பு எனின் அப் பாராட்டுக்குரியவர் தாமரைச்செல்வர் என்பது சொல்லாமலே விளங்கும்.

ஒரு நூல் வெளியீட்டுக் கழகத்திற்குத் தகுதிவாய்ந்த நூலாசிரியர்களும், விற்பனை நிலையங்களும், சிறந்த நூல் வாங்கிகளும், எத்துணை இன்றியமையாதவையோ, அத்துணை இன்றியமையாதது அச்சக வாய்ப்பு. ஆதலால் தனக்கென ஓர் அச்சகம் அமைத்துக்கொள்ள விரும்பியது கழகம். அவ் விருப்பம் அதன் வளர்ச்சிப்படிகளில்குறிப்பிடத்தக்க ஒன்று என்பது வெளிப்படை. "அச்சுத்தொழிலோ, நச்சுத்தொழிலோ?" என்பதொரு பழமொழி, பட்டறிவு மிக்கோரால் சொல்லப் பட்டனவே பெரும்பான்மையான பழிமொழிகள் என்பதை உணர்வோர் அத் தொழிலைச் செவ்விதாய் நிறுவி இயக்கி வெற்றி கொள்ளும் அருமையை நன்றாக விளங்கிக் கொள்வர். கழக அச்சகத் தொடக்கப்பாடிலேயே இவ் உண்மை விளங்குகிறது.

சென்னை 'டேவிட்சன்' தெருவில் 'சனசக்தி' அச்சகம் நடந்து வந்தது. அவ்வச்சகம் அரசின் ஆணையால் வேலை நடை பெறாமல் நின்று போனது. அதனை அச்சுத்துறையில் அருந்திறம் பெற்றவரும் கழக நூல்களைச் சிறந்தவகையில் அச்சிட்டுப் புகழீட்டித்தந்தவரும் ஆகிய சிறுமணவூர் மு. கேவிந்தராச முதலியார் அவர்களைக்கொண்டு சனசக்தி அச்சகத்தை விலைக்கு வாங்கும் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. அவ்வாறே, பன்னீராயிர ரூபா என மதிப்பிடப்பெற்று அதுவிலைக்கு வாங்கி முடிக்கப்பெற்றது.

திறப்பு விழா 4-10-48 இல் நிகழ்ந்தது. திறப்பு விழாத் தலைவராக அந்நாள் தமிழ்நாட்டு முதலமைச்சர்உயர்திரு. ஓமந்தூர் இராமசாமி இரெட்டியார் அவர்கள் அமர்ந்தனர். கழக ஆட்சியாளரும் இந்நூல் நாயகரும் ஆகிய வ.சு. அவர்கள் வரவேற்புரையும் நன்றியுரையும் வழங்கினர்.