பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

151

வியப்பு மேலிடல் உண்மை. இக் கட்டங்கள் 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பதன் பெற்றியை நன்கு விளக்கிக் கொண்டிருப்பவை எனல் தகும்.

நூல் வெளியீடு பெருகப் பெருக அச்சகப்பணியும் பெருக்க முறல் இயல்பே. ஆகலின் அப்பர்அச்சகத்தில் மட்டும் கழக நூல் வெளியீடு அமைவதாக இல்லை. இராயபுரம் அரத்தூள் சாலையில் அச்சகமும், அச்சிட்ட படிவங்களின் வைப்பகமும் அமைத்துக்கொள்ள வாய்த்தது. அவ்வச்சகம் கழக முன்னவர் திருவரங்கர் பெயர் தாங்கிப் பணியாற்றி வருகின்றது.

கழகம் தோன்றிய நாள்முதல்பதின்மூன்று நாள்களுக்கு ஒரு நூல் விழுக்காடு இதுவரை (1980) வெளிவந்துள்ளது. இப் பொழுது அதன் வெளியீட்டு வரிசை 1700 ஐத் தாண்டி நடையிடுகின்றது. அதன் 1008 வது வெளியீடு 21-8-1961 இல் பெருவிழாவாகக் கொண்டாடப்பெற்றது. ஆயிரத்து எட்டாவது வெளியீட்டு விழா மலர்ஒன்றும் மலர்ந்தது. முதல்ஆயிரத்து எட்டு நூல்களின் பாராட்டு விழா நூற்பட்டி ஒன்றும் அவ் விழாப்போழ்திலேயே தொகுத்து 1009 ஆம் வெளியீடாகவும் வெளியிடப் பெற்றது. 1008 ஆவது வெளியீடு ‘பன்னிரு திருமுறைப் பெருந்திரட்டு' ஆகும்.

1008 ஆவது நூல் வெளியீட்டு விழா சென்னை இராசாசி மண்டபத்தில் நிகழ்ந்தது. தமிழக ஆளுநர் மேற்கு விட்ணுராம் மேதி விழாத் தலைமையேற்றிருந்தார். ஆங்கிலத்தமிழ் அகராதி ஆசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.வி. சுப்பிரமணியம், இந்து அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் திரு. மீ. பக்தவத்சலம், உயர் நீதிமன்ற நடுவர் திரு. கணபதியாபிள்ளை ஆகியோர் விழாவில் பங்கு கொண்டனர்.

திரு. வ.சு. அவர்கள் "என் அரிய நண்பர் ஒருவர் அருச்சனைக்குரிய எண் 1008 ஆக இருப்பதாலும், கழகம் சைவ சித்தாந்தக் கழகமாகப் பெயர்பெற்று இருப்பதாலும் அம் முறையில் கழகத்தின் ஆயிரத்து எட்டாவது நூல் வெளியீட்டினை ஒரு பெரு விழாவாகக் கொண்டாடுவது பொருத்தமாகும் என்று கருத்துரைத்தார். அது மிகவும் போற்றுதற்குரியதாக இருந்த மையால் அவ்வாறு செய்வதென எண்ணினேன்" என்று விழாக் கொண்ட நேரத்தில் வெளியிட்டுரைத்தனர்.