பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதுரை காமராசர் பல்கலைக்கழகம் துணைவேந்தர், டாக்டர். வ.சுப.மாணிக்கம் அவர்கள் அன்புடன் அளித்த

அணிந்துரை

தாமரைச் செல்வர் தமிழ்ப் பெருமகன் சுப்பையா பிள்ளை வரலாறு தனியொருவர் வரலாறன்று, நூற்றிதழ்த் தாமரை போலத் தமிழ்மொழிக் காப்பையும் வளர்ச்சியையும் பெருமையையும் புலமையையும் தன்னுட்கொண்ட மாபெரு வரலாறாகும். தனித் தமிழியக்கம், இந்தியெதிர்ப்பு இயக்கம், தமிழிசைக் கிளர்ச்சி, தமிழ் வழிபாடு, தமிழாட்சி, தூய தமிழிதழ், அச்சகம், நூல்நிலையம், தமிழ்க் கலைகள், புலவர் விழா, புலவரைப் போற்றல் என்பனவெல்லாம் இவர் வரலாற்றொடு தொடர்புடையவை.

பெரியவர் வ. சுப்பையா பிள்ளை தமிழ்வளர்ச்சிக்குத் தாமே கண்ட பதிப்பு நெறிகளும் நூன்முறைகளும் தலைப்புகளும் வியக்கத்தக்கவை. 'சொற்பொழிவு' என்ற நூல் வகையில் சங்க முதல் தமிழிலக்கியம் எல்லாம் காலத்திற்கேற்ற கைவடிவு பெற்றன, நூற்றுக்கு மேலான அறிஞர்களின் மதிநுட்பத்தையும் எழுத்து வன்மையையும் திருவுருவங்களையும் 'சொற்பொழிவு' என்னும் இவ்வுரை நடைச் சிற்றிலக்கியம் பொதிந்து வைத்திருக் கின்றது. எதிர்கால ஆய்ஞர்க்கு இவை தொடுமணற் கேணியாகும். சங்க இலக்கியப் பேழை என்பது தமிழுக்குத் தங்க இல்லப் பேழை என்பதனை வரலாறு சொல்லும். குழவியர், சிறார், இளைஞர், முதியோர், பெண்டிர், அயலோர், மாற்று மொழியினர் என அனைதிறத்தினர்க்கும் பக்குவ நூல்கள் வெளியிட்ட பார் புகழ் தமிழ்த்தொண்டு திருவரங்கனார் தோற்றிய வ. சுப்பையா பிள்ளை நிலைநாட்டிய கழகத்திற்கே உரியது.

மறைமலையடிகள் நூல்நிலையம் என்பது விலைமதிக்க முடியாத அருங்கலை மாளிகையாகும். தாமரைச்செல்வர் தம் முயற்சியால் தமிழன்னைக்குக் கட்டிய தமிழணி நிலையம் என்று உலகறிஞர் பாராட்டுகின்றனர். எவ்வளவு இளைய அறிவுடை நம்பிகள் இந்நிலையத்திற்கு நாள்தொறும் சென்று இருந்து குறிப்புத் தொகுத்து ஆய்வை விதைக்கின்றனர். இஃது அறிவாற்றுப்படையாக விளங்குகின்றது.