பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




33. விழுமிய வேட்கை

(நெஞ்சின் வெளிப்பாடு, ஒளிவு மறைவு இல்லாமல் கூறும் சொல்லே. அன்புடையாரை அவர் தம் புன்கணீர் வெளிப் படுத்துவது போல் உள்ளத்து வேட்கையை உணரச்சி பொங்கக் கூறும் உரையே வெளிப்படுத்தும். எவ்வெவர் எத்தகையர் என்பதை வெளிப்படுத்த அமைந்த வெளிப்படைச் சான்று சொல்லைப் போல் ஒன்றில்லை.)

கழக ஆட்சியாளர் பெருகிய வேட்கையர்; விழுமிய வேட்கையர். ஆக்கமெலாம் தழைக்க வேண்டும்; அருமையெலாம் செழிக்க வேண்டும்; கலைகளெல்லாம் கமழ வேண்டும்; கருதிய வெலாம் முடியவேண்டும் - என்னும் பெருவேட்கையர்; விழுமிய வேட்கையர்.

அவரைக் கண்டு உரையாடிய எவரும் ஒருசில நொடிகளுக் குள்ளே அவர் தம் உள்ளத்து ஊற்றெடுத்து வெள்ளமெனப் பாயும் உணர்ச்சிப் பெருக்கில் ஒன்றிப்போவர்! எத்தனை முறை சந்தித்தாலும் அத்தனை முறையும் முன்னே உரைத்தோமே என்றும் எண்ணாமல் வேட்கையைப் பொழிந்து தள்ளுவார். அவ்வேட்கையிடையே அவர்கள் கொண்ட ஏக்கமும் உவர்ப்பும் ஒருங்கே வெளிப்படவும் செய்யும்! எங்கும் எவரிடமும் எதிர் காலத்தில் எய்த வேண்டிய வேட்கையை உரைக்கும்போது,

"இன்றுசெலினும் தருமே; சிறுவரை நின்று செலினும் தருமே, பின்னும் முன்னே தந்தனன் என்னாது துன்னி வைகலும் செலினும் பொய்யல னாகி"

வழங்கிய பிட்டங்கொற்றனையும் மட்டந்தட்டும் நிலையில் நாட்டு நல வேட்கையை நாட்டுவார்! எத்தனை முறை சொன்னாலும் அத்தனைமுறையும் அவர்களுக்கு அஃது ஆர்வப் பெருக்கே! நூற்றில் ஒருவருக்காவது, நூற்றில் ஒரு பங்காவது உணர்வைத் தூண்டி உருப்படியான செயலாக்க உதவாதா என்னும் உள்ளுணர்வே அஃது என்பது ஆர்வலர் நெஞ்சில் கட்டாயம் பதிந்துபோகும்! அயலவரைப்பற்றி அக்கறை என்ன!