பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




322

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

"இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல்'

என்ற குறள் கருத்தைக் கடைப்பிடித்துச் செயலாற்றும் திறன் மிக்கவர் கழக ஆட்சியாளர். இல்லையேல் என்னைப் போன்ற வேலைத் தொல்லை மிக்க அரசு அலுவலன் ஒருவன் நூல் எழுத எண்ணியிருக்கவே முடியாது. இந்த ஆற்றல், திறன், திரு.சுப்பையா பிள்ளையவர்கள் கருவிலே பெற்ற திருவாக இருக்க வேண்டும்.

திரு.சுப்பையாபிள்ளையவர்களின் செயல் திறன் என்னை மிகவும் கவர்ந்தது. கடிதங்களுக்கு உடனுக்குடன் மறுமொழி எழுதுவார். அவருடைய செயல்விரைவு, சுறுசுறுப்பு என்னை வியப்பிலாழ்த்தியுள்ளன. அவருடைய தனித்தமிழ்ப்பற்று அளவு கடந்தது. பலமுறை தமிழ்நூல்களை வெளியிடப் போதுமான ஆதரவின்மை, மக்களிடையே விழிப்பின்மை ஆகியவை பற்றிப் பேசி அங்கலாய்த்துள்ளார். நல்ல உயரிய தமிழ்நூல்களை வாங்கு வாரில்லாமையினாலேயே போற்றுவாரில்லை என்று கூறுவார். இருப்பினும் என்றும் தளர்ச்சியை அவர்பால் நான் கண்டதில்லை.

என் நூல்களை வெளியிடும்போது அவரே சொல்வார், இவற்றை ஊதியத்தை எதிர்பார்த்து வெளியிட முடியாது என்று. இருப்பினும் என்னை ஊக்குவித்து இத்தகைய நூல்களைத் தமிழ் மக்கள் வாங்கும் நாள் வரும்; இத்தகைய முயற்சி வீணாகாது என்று கூறி என்னை மேலும் நூல்கள் எழுதத் தூண்டினார். இதன் காரணமாகவே "சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்” என்ற நூலும் வெளிவந்துள்ளது. இந்தஇரு நூல்களும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பயன் தந்திருந்தால் அதற்கு அடிப்படைக்காரணர் திரு. சுப்பையாபிள்ளையவர்கள் என்று நான் கூறினால் அது மிகையன்று.