பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

35

திருசங்கர் கம்பெனி (திருவரங்கர் சங்கரநாராயணர் கம்பெனி) என்னும் நிறுவனத்தை 1917 இல் நிறுவினார். அதன் கிளை நிலையத்தை 1918 இல் சென்னையிலும் தோற்றுவித்தார். இந் நிறுவனமே சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுதற்கு வாய்த்த முன்னோடியாக அமைந்தது. அன்றியும் அடிகளாரின் நூல்கள் சீரிய வகையில் வெளிப்பட்டுச் செந்தமிழர் செல்வமாக விளங்குதற்கு வகையும் செய்தது. அடிகளாரின் ஆராய்ச்சிக் கருவூலமான திருவாசக விரிவுரை இந் நிறுவனத்தின் வழியாகவே செந்தமிழ்க் களஞ்சியம் என்னும் பெயரில் முதற்கண் வெளிப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவரங்கர் இயல்பிலேயே கூர்ந்த மூளையர்; மாந்தர் இயல்பை ஊடுருவி நோக்க வல்ல ஆற்றல் படைத்தவர்; முயற்சி, சுறுசுறுப்பு, கடைப்பிடி, இனிமை,. ஒப்புரவு முதலியவற்றின் தழும்பேறியவர்; பெருமக்களிடம் நட்பாடும் பாங்கும் அவர் களிடம் பணிகொள்ளும் பான்மையும் கைவரப் பெற்றவர். எப் பணியையும் அருமையுடைத்து என்று அயர்தல் அறியாதவர்; கண்காணிப்பிற் கண்டிப்பும், பகையில் விழிப்பும், பழமையில் கண்ணோட்டமும் கவினப் பெற்றவர்.

கடிதம் வரைதலில் காலம் தவறாக் கருத்துணர்வாளர். அவரை அவ் வகையில் வெற்றி கொள்வார் அரியர்; ஆங்கிலம் அருந்தமிழ் ஆகிய இருமொழிகளிலும் திருத்தமாக எழுதும் திறலர்; எழுதும கடிதங்களில் பழந்தமிழ் நூல் மேற்கோள்களை ஊடாட விட்டு உணர்ச்சியூட்ட வல்வர்.

தொகுப்புக் கலைச்செல்வர் அவர். சட்டைப் பைகள் புடைத்து நிற்கத் தொகுப்புக் குறிப்புகள், கடிதக் கற்றைகள், அடைத்துக் கொண்டு இருக்கும். பழஞ்சுவடிகள், இதழ்கள், திங்கள் முத்திங்கள் ஆண்டு வெளியீடுகள் ஆகியவற்றைத் தொகுத்தும், தொகுத்தவற்றை வனப்புற வகுத்தும், வகுத்தவற்றை வளமுறப் பேணிக்காத்தும் அவர் தாமே எண்ணி எண்ணி இடையீடு இன்றிச் செய்த செயற்கரும் செயல்கள் நினைதோறும் இன்பம் பயப்பனவாம். இவ் வியற்கைத் திறனால்இவர்சேர்த்து வைத்த அருங்கலைச் செல்வங்கள் இன்றைய நோக்கில் மதிப்பில் அடங்குதற்கு உரியன அல்ல. மற்றொன்று இவர்தம் அரும்பெருந் திறல்கள் எல்லாம் விஞ்சிப் பெருக்கெடுத்துக் குன்றின்மேல் இட்ட விளக்காகி நாட்டுக்கு நற்பயன் விளைக்க ஒரு தம்பி வ. சு. வை உருவாக்கியது.