பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

43

அமையும். ஆனால், ஒரு நூலாசிரியன் செய்யும் பிழை நாட்டையே நலிவிக்கும் என்னும் பெரு நெஞ்சம் வாய்ந்த பெருமக்களே இத்துறையில் தலைப்படத் தக்கவர்கள். இவ்வகையால் நோக்கின் ஒரு பல்கலைக்கழகப் பணியினும் மேம்பட்ட பணியென்று சொல்லத்தக்கது அறிவுநூல் பதிப்பகப்பணி என்று மலைமேல் ஏறிநின்று தலைநிமிர்ந்து கூறுத்தக்க தனிப்பெருமையுடையதாம்.

புழுவாய்ப் பூச்சியாய் வீழ்ந்து மடிய இருப்பாரை, இருசிறகு, எழுப்ப எழும்பும் பறவைபோல உயரத்தின் உயரத்தில் பறக்க விடுவது எதுவோ, நிலைபெறா வாழ்வை நிலைபெறுத்த வல்லது எதுவோ, நம்பிக்கை இழந்துபோய் நலியும் வாழ்வை, நம்பிக்கையூட்டித் தட்டி நிறுத்தி நல்லபல செய்தற்கு ஏவுவது எதுவோ, தொய்வில்லாத் துணிவும், எழுச்சியும் தொடர்ந்து தரவல்லது எதுவோ, மாசுகளை அகற்றி மணியாக ஒளிவிடச் செய்ய வல்லது எதுவோ, கோட்டத்தை நிமிர்த்தி நேராக்க வல்லது எதுவோ. கொள்கையில் பிறழாக் கொழுமையைக் கொண்டொழுக வைப்பது எதுவோ, இவன் சான்றோன் என்று பல்லாயிரவர் இடையே இருந்தாலும் ஒருவனை இனங்கண்டு தலைவணங்கச் செய்யும் தகவளிப்பது எதுவோ அதுவே அறிவு நூல் ஆதலின், அத்தகு நூல்களை வெளியிடும் நிறுவனத் தொண்டுக்கு இணை அதுவேயென்று கூறுவது அன்றிவேறொன்று கூறுதற்கு இல்லையாம்.

இன்னும் அறிவுநூல் வெளியீடே அறப்பணியாய் இருக்க, அப்பணியால் அடையவரும் ஊதியத்தில் செம்பாதியை அறவழி களுக்கே செலவிட வேண்டுமென வரம்புகட்டி வாய்க்கால் கோலி அறப்பயிரை வளர்த்து வருதற்குத் திட்டம் தீட்டியதும், அதனைச் சிக்கெனக் கடைப்பிடித்துச் சீரிய அறநிறுவனங்கள் பலவற்றைத் தோற்றுவித்துக் கண்ணின் மணியாய்க் காத்து வருவதும், பொன் மலருக்குப் புதுமணமும் வாய்த்தது போன்ற பெருமைக்கு உரியதாம். இவற்றையெல்லாம் எண்ணி உணர்வோர், இற்றைக்கு அறுபது யாண்டுகளின் முன்னே சைவசித்தாந்தக் கழகக்கூட்டுப் பங்கு நிறுவனம் தோற்றுவித்த அருமையை நினைந்து வியந்து போற்றாமல் இரார். கூட்டுறவு அமைப்பு முறையிலும், புத்தக வெளியீட்டு நிறுவனத் தன்மையிலும் இச் சைவசித்தாந்தக்கழகம் தன்னிகரற்ற தனிச் சிறப்பால், உலகுக்கு ஒரு மாமணியாய் விளங்குதலை இவ்வரலாற்றின்கண் ஆங்காங்கு அறிந்து மகிழ்க.