பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. ஆட்சியின் அருமை

(ஏர் உழுதலினும் நலமாகும் எருவிடுதல்; எரு விடுதலினும் நலமாகும் களையெடுத்தல்; களையெடுத்தலினும் நலமாகும் நீர்ப்பாய்ச்சுதல்; நீர்ப்பாய்ச்சுதலினும் நலமாகும் காவல் புரிதல்; காவல் சோர்ந்தால்கைப்பிடி தவசமேனும் களஞ்சியத்திற்கு வந்து சேருமோ?)

ஆளுகை, ஆளுதல், ஆட்சி என்பனவெல்லாம் ஒரு பொருள் தரும் சொற்கள். ஒவ்வோர் ஆளும் - ஆண் ஆள் எனினும் பெண் ஆள் எனினும் ஆளுகைத் திறம் வாய்ந்தவர் என்பதே இத் தமிழ்ச் சொல்லின் குறிப்புப்பொருளாகும். ஆனால், இப் பொருள் விளங்க வாழ்ந்து காட்டியவர் விரல் விட்டு எண்ணத் தக்கவராகவே உள்ளனர் என்பது வரலாறு காட்டும் உண்மை.

ஓர் ஆட்சிப்பரப்பு, நாடாக இருந்தால்என்ன? வீடாக இருந்தால் என்ன? ஒரு நிறுவனமாக இருந்தால் என்ன? ஓர் அமைப்பாக இருந்தால் என்ன? அதன் சிறப்பு அதனை ஆள்பவர் சீர்மையைப் பொறுத்தே அமைகின்றது.

மன்னன் எப்படி, மக்கள் அப்படி என்பது முடியாட்சிக் காலப் பழமொழி. 'ஆள்பவர் எப்படி, வாழ்பவர் அப்படி' என்பது குடியாட்சிக்காலப் புதுமொழி. மேல்நிலையில் இருந்து ஆணையிடுபவர் செம்மையிலராயின் அவர்க்குக் கீழ்நிலையில் இருந்து பணிபுரிவாரிடம் செம்மை தங்குமோ? செம்மை தங்க வில்லை எனக் கீழ்நிலையில் இருப்பாரை மேல்நிலையில் இருப்பார் தட்டிக் கேட்கவும் இயலுமோ?

இதனைச் சங்கச்சான்றோர் ஒருவர் தெள்ளிதின் விளக்கினார். அவர் தொண்டைமான் இளந்திரையன் என்பார். ஆட்சிப்பொறுப்பில் இருந்த அவர் ஆட்சிபற்றிக் கூறிய அறிவுரை அவர் பட்டறிவால்வெளிப்பட்டதாகலின் போற்றிக் கொள்ளத் தக்கது என்பதில் ஐயமின்றாம்.