பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

இளங்குமரனார் தமிழ்வளம் - 27 30

நிற் பெருமையரும்இக் கோவிந்தராசனாரே ஆவர். இவர்தம் குடும்பச் சூழலால் தம் அச்சகத்தை விற்ற பின்னர் அவ் வச்சகத்தை விலைக்கு வாங்கிய ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்திற்கு அச்சக மேலாண்மைப் பொறுப்பாளராக விளங்கினார். அதன் பின்னே கழகத்திற்கு அப்பர் அச்சகம் கால்கொண்டபோது அதன் மேலாண்மைப் பொறுப்பாளராக அணி செய்தார். கழக வெளியீட்டுக்குத் தொடக்க நாள் முதல் பெருமை சேர்த்த பெருமக்களுள் கோவிந்தராசனார்க்கும் சிறந்த இடம் உண்டு. அவரை வயப்படுத்தி ஆட்கொண்டு அருங்கலைச் செல்வர் அவரெனத் தமிழகத்திற்குக் காட்டுவித்த பெருமை வ.சு.வுக்கு உண்டு.

இனி நூல் வெளியீட்டுத் துறையில் வ.சு. அவர்களுடன் உடன்பிறப்பாக இருந்து உழுவலன்புடன் உதவியவர் காழி சிவ. கண்ணுசாமிப்பிள்ளையவர்கள். சீர்காழிப் பதியிலே பிறந்த இவர் கல்லூரிப் பட்டப்படிப்பில் தேர்ந்து 'அஞ்சலக ஆட்சித் தலைமை அலுவலக'த்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். எழுத்தாற்றலுடையவர். தமிழை ஆங்கிலத்திலும் ஆங்கிலத்தைத் தமிழிலும் மொழி பெயர்த்தலில் தேர்ச்சி மிக்கவர். கழகம் பவழக்காரத் தெருவுக்கு 1927 இல் மாறிவந்தபோது, அதே தெருவில் அண்மையில் குடியிருந்த காழிக்கண்ணர் கழக முகவர்க்கு அணுக்கரும் அன்பரும் ஆயினார்; உடன் பிறப்பாக ஒன்றினார். கழக வெளியீட்டுத் துறையில் சிறந்த பங்கேற்றார் அச்சுப்படி பார்த்தலில் தொடங்கிய துணை பின்னே செல்விக்குக் கட்டுரை வழங்குநராகச் செய்தது. நூலாசிரியரும் ஆக்கிற்று! கழக வெளியீடுகளை ஒல்லும் வகையில் அழகுறுத்தும ஒப்பனைச் செல்வரும் ஆக்கிற்று!

செல்வி ஆறாம்இதழிலே தொடக்குகின்றது இவர் எழுத்துப் பணி. அவ் விதழிலே ஆங்கிலப் பேரறிஞர் 'பேக்கனார்' கட்டுரை தமிழாக்கம் பெறுகின்றது. தனித்தமிழில் செறிவுமிக்கதான அப்பெயர்ப்புக் கட்டுரைகள், பொருட் சிறப்பாலும் மொழி நடைத்திறத்தாலும் பொலிகின்றன. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் 'பொருளின் பிண்டக் கருத்துகள்' என்னும் ஒரு பகுதியும் பேக்கனார் கொண்ட பொருள் நிலைக்கு ஒப்பான தமிழ்நூற் பாடல்கள் பழமொழிகள் ஆகியவற்றை 'மேற்கோள்' காட்டும் ஒரு பகுதியும் இடம்பெற்றுத் தனக்கென ஓரமைப்பைக் கொண்டுள்ளது. பெற்றோரும் மக்களும் எனத் தொடங்கும்