பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

63

அக்காழிக் கண்ணர் கட்டுரைத் தொடர் வாய்மை, வெகுளி, ஒறுத்தல், கற்கை, இறப்பு, மணவாழ்க்கை, காதல், வறுமை என வளர்ந்து, பெரு நிலக்கிழவர்பேக்கன் என்னும் கட்டுரையாய் நிறைகின்றது. ஆற்றலுடையாரை அரவணைத்து அவர்கள் திறன் நாட்டுக்கு நற்பொருளாம் வகையில் தொண்டு செய்தலில் தேர்ந்த வ.சு. அவர்களின் ஒப்பற்ற தன்மைக்கு வாய்த்த அரிய சான்றுகளுள் இஃதொன்றாம்.

கழக வழியே நூல்களை அச்சிடுதற்குத் தேர்ச்சிமிக்க சில திட்டங்களைத் தொடக்க நாளிலேயே கொண்டிருந்தார் வ.சு. அத்திட்டங்களை அறிந்துகொள்ளுதல் அவர்தம் சிறப்புகளை உணர்த்துவதுடன், வெளியீட்டாளர்களுக்கும் பயனுடையதுமாம்.

“அச்சிடுதற்குத் தொகுக்கப்பெற்றிருக்கும் கையெழுத்துப் படிகளைச் சரிபார்த்துப் பொருள்வாரியாக நூலாசிரியர் உரையாசிரியர் பெயர்களுடன் பட்டி எழுதி ஒழுங்குபடுத்தி வைத்தல் வேண்டும். அவற்றில் எதனை அச்சிடுதற்கு எடுப்பினும் கழகப் புலவர்களைக் கொண்டு முதற்கண் சரிபார்க்கச் செய்தல் வேண்டும். அதன்பின் என்ன அளவில் என்ன எழுத்தில் எத்தனை படிகள் அச்சிட வேண்டும் என்று முடிவுசெய்து அச்சுக் கோப்பதற்குக் கொடுத்தல் வேண்டும். அந் நூலுக்குரிய தாள் போதுமான அளவில் இருப்பு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

"தட்டப் படிவத்தையும், பக்கப் படிவத்தையும் மூலப் படியோடு ஒத்துப் படிக்கச் செய்து திருத்துதல் வேண்டும். நூலாசிரியர் இருப்பின் அவர் திருத்தத்துக்கும் பக்கப்படிவத்தை அனுப்புதல் வேண்டும்"

'அந் நூலில் படங்கள் வரவேண்டியிருப்பின் நூலாசிரியரைக் கலந்து, ஓவியரைக் கொண்டு படங்களை எழுதுவித்து அச்சுக் கட்டை செய்து வாங்கித் தட்டப்படிவ மெய்ப்பிலே உரிய இடங்களில் அமைத்துப் பக்கமெய்ப்பு எடுத்தல் வேண்டும்."

"தனியே மெய்ப்பினைத் திருத்துபவர் ஓசைபடாமல் ஒலித்துத் திருத்துதல் வேண்டும். அவ்வாறு செய்தால் பிழைகள் எளிதில் புலப்படும். கையெழுத்துப் படியில் கூடுமானவரை முன்னதாகச் சேர்க்க வேண்டுவனவற்றை எழுதிச் சேர்த்து விடுவது நல்லது. அப்படிச் சேர்க்க விடுபட்டுப் போயினும்