பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12. கோடையில் குளிர்தரு

(பாலைக்கு இடையேயும் பசுஞ்சோலை உண்டு; பாறைக்கு இடையேயும் பனிநீர் உண்டு; காரிருளுக்கு இடையேயும் கை விளக்கு உண்டு; வாட்டும் வறுமைக்கு இடையேயும் ஊட்டும் உள்ளம் உண்டு. இவையே ஆற்றாமையை ஆற்றி அருள் செய்வன)

தவத்திரு மறைமலையடிகளார் தொடர்பு அரங்கனார்க்கு முதற்கண் தமிழ்த் தொடர்பாகிப் பின்னர் உயிரொடும் ஒன்றிய கெழுதகைமைத் தொடர்பாக விரிந்தது. 'திரிசங்கர் கம்பெனி’ யைத் தொடங்குமுன் அடிகளார் வளமனையில் அரங்கனார் சின்னாள்கள் உறைந்தார் அன்றோ! அந் நாளில் அடிகளா திருமகளார் நீலாம்பிகையாரைக் கண்டு களிகூர்ந்தார்; காத கொண்டார். அம்பிகையாரும்ஆருயிர்க் காதலராக அரங்கரை கொண்டு கனிந்து உருகினார். ஆனால், நூல் பதிப்பு வகையில் அடிகளார்க்கும் அரங்கர்க்கும் உண்டாகியிருந்த ஒரு பிணக்கு திருமணத்தைச் சில ஆண்டுகள் தடுத்து நிறுத்தியது! காதலர் இருவரும் கருத்திலே ஒருமித்து நின்றனர்; அடிகாளர் மெல்லுள்ளமும் உருகியது. அறிவறிந்த சான்றோர்களும் அணுகி உரைத்தனர். அந் நிலையில் 2-9-1927 இல் திருமயிலைக் கபாலீசுவரர் திருக்கோயிலில் தமிழுலகின் இணையற்ற புலவர் களெல்லாரும் ஒருங்கிருந்து வாழ்த்தத் திருமணம் இனிது நிகழ்ந்தது.

அண்ணலார் திருமணமே அவர்தம் முப்பத்தேழாம் அகவையில் நிகழ்ந்தது. அவர்தம் அறிவறிந்த இளவலார் அதற்குப் பின்னரும் கடமை உணர்ச்சிமிகுதலால் தம் திருமணத்தைக் கருதினார் அல்லர். கடமையேகாதற்கிழத்தி எனக்கொண்டு கழகப்பணிகளிலேயே இடையீடுபடாமல் உழைத்தார். பொழுதுஎன வரம்பு செய்து கடனாற்றுவது இவர் அறியாத ஒன்று. கூட்டுப் பங்கு நிறுவனத்து ஊழியரே தாம் எனினும், வீட்டுப்பணியினும் விழுமிதாக எண்ணி முழுதார்வத் தால் உழைப்பதை அன்றி ஓய்வோ ஒழிவோ கொள்வதை அறியார்.