பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14. இரு பேரிடிகள்

(குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ (டு) உயிரிடை நட்பு)

- திருக்குறள்

கழக அமைச்சர் திருவரங்கரும் அவர்தம் அருமைக் கிழத்தியார் நீலாம்பிகையாரும் ஈடும் எடுப்புமில்லா இல்லறம் நடாத்தி மக்கள் எண்மரைப் பெற்று இனிது வாழ்ந்தனர் இந்நிலையில் ஒருநாள் இளவல் வ.சு. அவர்களுக்குப் பின் விளைவை அறிவிக்கும் அடையாளம்போல உண்ணவும் உறங்கவும், அமைந்து இருக்கவும் இயலாத ஒரு பரபரப்பான குழப்பநிலை உண்டாயிற்று. அதனால் அன்றிரவே, சென்னை யிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் பாளையங்கோட்டை போய்ச் சேர்ந்தார்.

தமிழ்த் திருவாட்டி நீலாம்பிகையார்க்கு உடல்நலம் குன்றியிருந்தது. அவர்க்கு மருத்துவம் செய்வதற்காகத் திருவரங்கர், டோனாவூர்க்கு அழைத்துச் சென்றிருந்தார். சென்றவர் அன்று மாலையிலே திரும்பினார். திரும்பி வரும்போதே அரங்கர் உடல்நிலை இரங்கத்தக்கதாக இருந்தது. நெஞ்சு வலி கண்டு நெக்குருகிப் போனார். உயர்ந்த மருத்துவர்களை அழைத்து உடனே மருத்துவம் செய்வித்தும் உடல்நிலை சரிப்படவில்லை. அந்தோ! தமிழ்த்தாயின் தலைமகனாராக விளங்கி, அவளுக்குப் பொன்னும் மணியும் பூட்டிய புகழ்மகனார் திருவரங்கர் ஆரூயிர் 28-4-1944 இரவு ஒன்பது இரவு ஒன்பது மணிக்குப் பிரிந்து அம்மை அம்பலவாணர் பொன்னார் திருவடிகளில் ஒன்றியது.

அரங்கர் ஆருயிர் எவ்வாறு பிரிந்தது? ஆருயிர்த்தம்பியார் மார்பில் சாய்ந்த நிலையிலேயே அரங்கர் ஆருயிர் பிரிந்தது! இருவர் உயிரன்பும் ஒருவரோடு ஒருவர் ஒன்றிக்கிடந்த ஒரு நிலையை உலகுக்கு அறிவிக்கும் திருக்குறிப்புப் போலும் இது!