பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

10-9-89 இல் சென்னை மாவட்டக் குறளாய மாநாடு வேலா தலைமையில் நிகழ்ந்தது. பாவலர் ஈவப்பனார், இசை இறையார், சே.கந்தப்பனார், மா. வழித்துணையார். திருவாளர்கள் கா. பொ. இரத்தினம், பாவலர் சுரதா, கு.இரகுபதி, வீ. செ. கந்தசாமி, தமிழப்பன் ஆகியோர் பங்கு கொண்டனர்.

10-9-89 மாலையில் சென்னை மாவட்டக் குறளாய மாநாடு, தமிழ்வழிக் கல்வி இயக்கச் செயற்பாட்டுக் கருத்தரங்காக நிகழ்ந்தது.கிழ்வுக்கு முத்தமிழக் காவலர் தலைமை ஏற்றார். திருவாளர்கள் வா.மு. சேதுராமன் இறையன், அரணமுறுவல், பொற்கோ, இளங்குமரன், மெய்யப்பன்,ஈவப்பனார், ஆதி அறிவுடை நம்பி ஆகியோர் பங்கு கொண்டனர். வேலா அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து விளக்கினார்.

திருக்குறள் நம்மறை என்பதைத் தேர்ந்த புலமையரும் ஏற்கத் தயங்குதலும் மயங்குதலும் கண் கூடு. மறை என்ற அளவில் அவர்களுக்குத் தோன்றுவது வேதம் என்பதே! மற்றொன்று பொதுமறை, உலகமறை, தமிழ்மறை எனப்படுவதை நம்மறை என்பதா? என்பது! இதனால் நம்மறை என்பதற்குரிய கரணியத்தை மேடைதோறும் வைத்து விளக்கு தலைக் கடனாகக் கொண்டார் வேலா. பிறர்பிறர் கூறும் விளக்கங்களையும் தகவாக ஏற்றுப் போற்றினார். தொடர் கட்டுரையாகத் "திருக்குறள் நம்மறை" என ஆசிரிய உரையும் எழுதினார்.

வேலாவின் குறளிய குறளாயப் பணிக்கு அளவு கோல் உண்டா? ஒன்றைச் சுட்டுதல் சாலும்!

வேலா அறுவைப் பண்டுவத்திற்கு ஆட்பட்டு மருத்துவ மனையிலும், ஓய்வுத் தங்கலிலும் பல திங்கள் இருக்கும் இக்கட்டு உண்டானதை உணர்வோம்; அறிவோம். அவ்வேளை எத்தகைய வேளை! அவ்வேளையிலும் அவர்தம் ஆசிரிய உரை அறுவை செய்த அத்திங்களிலும் கூட காலம் தாழ்ந்து கூட - வரவில்லை! எவரெவர் கட்டுரை வழக்கமாக இடம்பெறுமோ அவை வருவதற்கு முன்னாகவே வந்தமைந்தது, வேலாவின் உயிர்ப்பே குறளியம் குறளாயம் என்பதை நிலைநாட்டும். வேலாவுக்குக் குறளே அமுது! குறளே மருந்து! குறளே விருந்து! இஃது இயற்கை யாகி விட்ட நிலை! இந்நிலையும் ஓராண்டு ஈராண்டு நிலையில்லை. ஆதலால், அதுவே நடைமுறை வாழ்வாகி விட்டதாம்.