பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

229

முத்துவுக்கு முன்னே ஒரு குழந்தை பிறந்து இறந்தது. பின்னும் அப்படி ஒன்று ஆனது. மூன்றாம் குழந்தையே முத்து. இக் குழந்தையாவது உயிரோடு இருக்கவேண்டும் என்று இறையருளை வேண்டி, முறத்தில் குழந்தையை வைத்துக் குப்பையைச் சுற்றி வந்து குப்பையில் கிடைத்த குண்டுமணியாகக் கொண்டனர். இது அவ்வட்டார வழக்காக இருந்தது. அது போலச் சடங்கு செய்யப்பட்ட பிள்ளை ஆதலால் 'குப்பை முத்து' எனப்பட்டார். அப்பெயர் பின்னர்க் குப்பு முத்து ஆகியது, முத்து பிறந்தது கி.பி. 28-1-1915 ஆகும்.

ஒரு தனி மகனார்

தனிமரம் தோப்பாகாது என்பது பழமொழி. ஒற்றைப் பிள்ளை பிள்ளை இல்லை" என்பதோர் கதையே உண்டு.

முத்துவோ தனிப்பிள்ளையாகவே இருந்தார். இனிதே வளர்ந்தார். பெருந்தக்க வாழ்வுத் தோன்றலாவே திகழ்கிறார். அடையாற்று ஆலமரம், ஒரு மரம் தானே! அதன் கீழ் எத்தனை ஆயிரம் பேர்கள் தங்கலாம்! மேலே எத்தனை ஆயிரம் பறவைகள் தங்கியுள்ளன! ஆதலால் தனி மரம் தோப்பாகாது என்பதைப் பொய்யாக்கிய அடையாற்று ஆலமரம் போல் ஒற்றைப்பிள்ளை இல்லை என்னும் வரலாற்றைப் பொய்யாக்கிய மெய்வாழ்வு குப்பு வாழ்வாகும்.

சங்கப் புலவர் தனிமகனார் போலவும், திருப்பாடல் தனியன்கள் போலவும் தனிச்சிறப்பு மிக்க பெருமகனார் என்பதை ஊரும் உறவும் உணரப்போலும் முத்து ஒரு பிள்ளையாகத் திகழ்ந்தார்.

சங்கப் புலவருள் ஒருவர் பெயர் குப்பைக் கோழியார் என்பது. இப்பொழுது குப்பைக் கவிஞர் என ஒருவர் சிறப்பொடு வாழ்ந்து வருகிறார்.

குப்பை என்பது குவியல் என்னும் பொருளது. அது மிகுதிப் பொருளும் தரும். "மணியின் குப்பை" என்பது இலக்கிய வழக்கு. இங்கே குப்பை முத்து என்பதை முன்பின் மாற்றினால் முத்துக் குப்பை ஆகிவிடும். உயர் குணங்களுக்கெல்லாம் உறை விடமாகத் திகழப் பிறந்த பிள்ளைக்கு இப்பெயர் இலக்கணப் பெயரே ஆகிவிட்டதாம்?