பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

105

இந்நிலைமையில் பனாமா தன்னுரிமைக் கிளர்ச்சியில் இறங்கியது. அதற்கு அமெரிக்க அரசு மிகத்துணை புரிந்தது. ஆதலால் பனாமா விரைந்து தன்னுரிமையும் பெற்றது. உடனே அமெரிக்கக் கூட்டரசு பனாமாக் கூட்டரசுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டது.

புதிய ஒப்பந்தத்தால் பனாமாக் கடற்கால் பகுதி முழு உரிமையும் அமெரிக்கக் கூட்டரசுக்கே உடமை ஆயிற்று. அதற்கு ஈடாகப் பனாமாவின் விடுதலையை ஏற்பதுடன், முதற்பொருளாக ஒரு கோடி வெள்ளியும், ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் தர இசைந்தது.

கடற்கால் அகழ்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மிக நெருங்கிய நில இடுக்கு ஆகும். பசிபிக் மாகடல் முகத்திலுள்ள பல்போவோத் துறைமுகத்தில் இருந்து அட்லாண்டிக் மாகடல் முகத்திலுள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடியும். அக்கால் 50 கல் நீளம் உடையது. வட அமெரிக்காவில் இருந்து தென் அமெரிக்கா செல்லும் ஊடு நெடுந்தொடரும் கேதன் ஏரியும் இக்கால் பகுதியில் உள்ளன. கேதன் ஏரிக் கோடியில் கேதன் பூட்டுக்கால் என்னும் அமைப்புச் செய்யப்பட்டுள்ளது. கப்பல்களை இறக்கி ஏற்றும் நீரேணியாக இது பயன்படுகிறது. இப்பகுதியைக் கடந்து 7 கல் தொலைவுக்குக் கடல் மட்டத்திலேயே கால் சென்று அட்லாண்டிக் மாகடல் முகப்பில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடிகிறது.

கேதன் ஏரி கடந்த பகுதி மிராப்ளோர்சு ஏரி என்னும் நீர்த்தேக்கத்தின் ஊடே கடற்கால் செல்கிறது. இதன் நீளம் 3 கல். இதன் மட்டம் கேதன் ஏரியைவிட 31 அடி தாழ்ந்தது. எனினும், கடல்மட்டத்தைவிட 54 அடி உயர்ந்தது. கேதன் ஏரிக்கும் மிராப்ளோர்சுக்கும் இடையே உள்ள பெட்ரோ மிகுபெல் என்னும் பூட்டு, ஒரு படி நீரேணியாக இருந்து கப்பல்களை 31 அடி ஏற்றி இறக்கி மட்டத்திற்குக் கொணர்கிறது. இதன்பின் மிராப்ளோர்சு பூட்டுக்கள் என்னும் இரண்டு படிகள் உள்ள நீரேணி அமைப்பு, கப்பல்களை 54 அடி கீழே இறக்கிக் கடல் மட்டத்தில் விடுகிறது. இதன்பின் கடற்கால் 7 கல் தொலைவு சென்று பல்போவோத் துறையில் சேருகிறது.

ஊடுநெடுந் தொடர்மலையைப் பிளந்தே கடற்கால் அமைப்புச் செய்தனர். அப்பணியைத் திறமாகச் செய்தவர் கால்லியர்டு.ஆகவே இவர் பெயரால் கால்லியர்டு பிளவு என அது