பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

113

குழை: குழை மகர மீன் வடிவமாக வட்டமாகச் செய்த தொரு காதணி. அஃதாவது மகரமீன் வளைந்து தன் வாலை வாயில் கெளவி இருப்பது போன்ற வட்ட வடிவமாகச் செய்யப் பட்ட அணிகலன். (கலி. விளக்கம். பெருமழை.)

குளம்:

குளிப்பதற்காக அமைந்தது குளம். வானத்தி னின்றும் பெய்யும் மழையால் பெருகும் குளத்தை வானமாரிக் குளம் என்பர். (தமிழ் விருந்து, 87)

குற்றியலுகரம், குற்றியலிகரம்: சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல இகர உகரங்கள் குறுகின இடத்தும் அவை உயிர் ஆகற்பாலன. (தொல். எழுத்து. 2. இளம்.)

குறவன்: குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர் குறவர். அவர் களில் ஆண்மகன் குறவன் என்றும் பெண்மகள் குறத்தி என்றும் பெயர் பெற்றனர். இச் சொற்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு ஆகிய திராவிட மொழிகளில் வழங்குகிற படியால், இந்த இனத்தார் பிரிந்து போவதற்கு முன்னே மூலத்திராவிட மொழியில் தோன்றியிருக்கவேண்டும். குறவ என்னும் திராவிடச் சொல்லை வடமொழியாளர் கடனாகக் கொண்டு வழங்கி வருகிறார்கள். அவர்கள் இந்தச் சொல்லை அப்படியே உச்சரிக்க முடியாமல் ‘கிராத’ என்று திரித்து வழங்குகிறார்கள்.

(அஞ்சிறைத்தும்பி. 139-140)

குறிச்சி: குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என்று பெயர் பெற்றனர். அன்னார் குடியிருந்த இடம் குறிச்சி என்று குறிக்கப்பட்டது. "குறிச்சி எங்கள் குறச்சாதி இருப்பதம்மே என்று ஒரு குறவஞ்சி கூறுமாற்றால் இவ்வுண்மை விளங்கும்.

(ஊரும் பேரும். 6)

குறிஞ்சி: தழுவுகின்ற செயலே தழிஞ்சி எனப் பெயர் பெற்றது என நச்சினார்க்கினியர் விளக்கினார். கொழுமையை ஊட்டுவதால் 'கொழிஞ்சி' என ஒருவகை உரச்செடி பெயர் பெற்றது. நெரிப்பதால் (குத்துவதால்) நெரிஞ்சி என ஒரு வகை முள் பெயர் பெற்றது. தழுவுதல் தழிஞ்சி எனவும், நெரிப்பது நெரிஞ்சி எனவும் ஆவது போலக் குறுகுதல் குறிஞ்சியாகும். குறுகுதல் என்பதற்கு நெருங்குதல், அணைதல், சேர்தல், இணைதல், புணர்தல் எனப் பொருள் கூறலாம். குறுகுதல் என்பது நெருங்குதல் எனப் பொருள்படுவதை வள்ளுவர் குறளாலும் அறியலாம்.