பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

3

நோ

நோக்கு: (1) நோக்கு அல் நோக்கம். கண்ணால் நோக்கும் நோக்கம் அன்றி மனத்தால் நோக்கும் நோக்கம். அஃதாவது கருதுதல். (தொல். சொல். 93. நச்.)

(2) நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்.(தொல். பொருள். 313. பேரா.)

(3) நோக்கு என்பது பார்வை என்று பொருள்படும். ஒருபாட்டை அல்லது இலக்கியத்தைப் படிப்போன் படிக்கும் பொருள் தன் மனக்கண் முன்னால் நிற்க அல்லது நிகழக் காண்பானாயின் அதுவே நோக்கு எனப்படும். அத்தகு லக்கியம் நோக்கைத் தரும் இலக்கியம் ஆகும். பழந் தமிழர் இத்தகு நோக்கைச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாகக் கொண்டனர். (நெடுநல்வாடை. பாநலம். 106.)

நோய்: 'நோய்' என்பது தளர்ச்சி, மெலிவு; நொய்ம்மையைச் செய்வது நோய் என்க. உள்ளம் எதனையும் சரியாக ஆராய விடாமல் பிணிப்பது பிணி. அப்பிணியை அவிழ்ப்பது அவிழ்தம். (மருந்து)

(பதினெண்கீழ்க் கணக்குச் சொற்பொழிவுகள். 212.)