பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

3

புரிந்துகொண்டு வருவதையும் உன்ன உன்ன உள்ளம் நைந்தது. பலகற்றும், பைந்தமிழ்க் குடியிலே பிறந்து வளர்ந்து, அத் தமிழாலேயே வாழ்வு நடாத்தி வரும் தமிழருட் சிலரும், அக்கேடர்க்கு அரணாகி அன்னையின் அழகு முகத்திற்கு ஆறா வடுக்களை ஆக்கிப் படைத்து அகங்களித்து வந்த நிலைமையோ மிகமிகப் புண்படுத்திற்று. இந்நிலை, என் செயல் எண்ணத்தைத் திண்ணிதாக்கிற்று. என் நெஞ்சத்தூன்றி யிருந்த சொற்பொருள் விளக்க வித்து முளையாயிற்று! பயிரும் ஆயிற்று!

இந்நிலையில், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், தண்டமிழ் அன்னையைப் பற்றி நலித்துக் கொண்டிருந்த பிறமொழிக் கலப்பென்னும் பெருநோயைப் போக்க வல்ல தனித்திற மருத்துவராகிப் காலத்தாற் செய்த செயற்கருஞ் செயல் செந்தமிழர் உள்ள அளவும் போற்றத்தக்கதாம். “தனித்தமிழ்ப் பற்றாளரே எம் நண்பர்” என ஒளிவு மறைவு இன்றி முழங்கிய அக்கோளரியின் வழியிலே இந்நாளில் ஏறு நடையிட்டு வீறுமிக்க ஆற்றலால் தமிழ்ப் பகையை வெற்றி கண்டு வரும் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் ஆவர். இவ்விரு பெரு மக்களும் படைத்துள்ள தனித்தமிழ் நூற்கள், சொற்பொருள் விளக்கப் பயிர்க்கு உரமிட்டு வளர்த்தன! நீர் பெருக்கிச் செழிப்பாக்கின!

“பல்கலைக் கழகப் பயிற்றுமொழி பைந்தமிழாக வேண்டும்”

என்று பறையறைந்து, நடைப்பயணத்தை மேற்கொண்ட காலையில், அந்நாளைய அரசால் சிறைக்கொடுமைக்கு ஆளாக்கப் பெற்ற செந்தமிழ் மாமணி சி.இலக்குவனார் அவர்கள் தலைமைக் கீழ் இயங்கிய தமிழ்க்காப்புக் கழகப் பொதுச் செயலாளனாகப் பணியாற்றும் பேறு எனக்கு வாய்த்தமை, சொற்பொருள் விளக்கப் பயிர்க்குச் சீரிய காவலாயிற்று!

சிவநெறியையும், செந்தமிழையும் தம்மிரு கண்களெனக் கொண்டு “எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது” பணியாற்றுவதுடன், குமரகுருபரர் குழந்தைப்பள்ளி, சிவஞான முனிவர் நூலகம், மறைமலையடிகள் நூலகம், மறைமலையடிகள் கலைமன்றம் ஆகிய சீரிய நிறுவனங்களை உருவாக்கித் தமிழ் கூறும் உலகமெல்லாம் தண்டமிழ் தனிக் கோலோச்சுமாறு தமிழகத் தலைநகர்களில் கிளை நிலையங்களைப் பெருக்கிச் செம்மையாக ஆட்சிசெலுத்திவரும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் திருமிகு வ.சுப்பையா பிள்ளை அவர்கள், “உரையாசிரியர்கள் புதுப்பொருள் விளக்கங்