பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

193

பல்லி: பல் இருப்பதனால் பன்றி என்று பெயர் இருப்பதை அறிந்தோம் இதேபோல் பல்லின் காரணமாகப் பெயர் பெற்ற மற்றோர் உயிரும் உண்டு. அதுதான் பல்லி. பன்றி பல்லி ஆகிய இரண்டு சொற்கள் பிறப்பதற்கும் பல்லே காரணமாக இருக் கிறது. (சொல்லின் கதை. 16.)

பல்லியம்: வாத்தியங்களுக்கு 'இயம்' என்பதும் பெயர். பல வாத்தியங்கள், ‘பல்லியம்’ எனப்படும். மிகப் பல வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்தமை பற்றி நெடும் பல்லியத்தனார் என்று ஒரு புலவர் பெயர் பெற்றிருக்கிறார். (சங்கநூற் கட்டுரைகள். I. 92)

பழக்கம்: முதலிற் பயன் கண்டு பழகிய பழக்கங்கள், பின்னர்ப் பலராலும் பல காலத்தவராலும் பின்பற்றப்படும் மேன்மை வாய்ந்தனவாய் விளங்கினால் நாளடைவில் அவை வழக்கங்களாய்மாறி இயற்கை யாற்றலொடு நிகழத் தொடங்கி விடுகின்றன. இச் செயற்கை இயற்கைகளின் இயைபையும் ஆற்றலையும் நன்கறிந்த மக்கள் தம் வாழ்க்கையிற் கடைப் பிடியாய்த் தழீஇ நடக்கு மிடத்து அந் நடக்கையே ஒழுக்கமென நுவலப்பட்ட தென்க. பழக்கம், வழக்கம், ஒழுக்கம் என்னும் இச் செயற்கையும், இயற்கையும், செயற்கை இயற்கையுமான வாழ்வியல் முறை மூன்றையும் ஆசிரியர் தொல்காப்பியர்,

"தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்

பகுதிக் கிளவி வரைநிலை இலவே”

என்னும் ஆற்றல் சான்ற நூற்பாவில் முறையே அழகாக நுவன்று நிறுத்தி யிருக்கின்றனர். இவற்றுள் தகுதி என்பதனாற் பழக்கமும், வழக்கு என்பதனால் வழக்கமும் இவை தழீஇயன ஒழுகும் என்பதனால் ஒழுக்கமும் ஆசிரியரால் புலப்படுத்தப்பட் டுள்ளன.

(சங்கநூற் கட்டுரைகள் II. 91)

பழகுதல்: பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல்.

(திருக். 785. பரி.)

பழமை: பழமை என்பது தொன்மை; தொன்மை எனுஞ் சொல் தொன்று என வருதலைத் ‘தொன்று தொட்டு' என்ற சொற்றொடரிற் காணலாம். இங்ஙனமே பழமை என்பது பண்டு என வரும். பண்டு என்பதற்குத் தெலுங்கில் 'பழம்' என்று பொருள். பழுக்கவில்லை என்பதைத் தெலுங்கர் ‘பண்டலேது’ என்பர். இதனால் பழமை, பண்டு, பழம் என்ற முச்சொற்களும் தொடர்புடையன என்பது புலனாகிறது.