பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

203

பி

பிச்சம்: பீலியாற் கட்டுவன.

(சீவக. 416. நச்.)

பிச்சு: பிச்சு என்பது கள்ளைக் குறிக்கும் மற்றொரு சொல். இத் தமிழ்ச் சொல் ‘பைத்தியம்' என்ற கோட்ட நிலையைக் குறிப்பதும் உணரற்பாற்று. இதனால் கள்ளை 6 எத்துணை வெறுத்தார்கள் என்பது புலனாம்.

(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12 :512.)

பிச்சை: பிச்சை என்ற சொல் வடசொல் என்று கருதுவர் சிலர். பிச்சை என்பது தமிழ்ச் சொல்லே. பிச்சை என்பது பலரிடமிருந்தும் ஒன்றினைப் பிரிப்பது தானே. பிரிப்பது என்ற சொல் நாஞ்சில் நாட்டில் வசூலித்தல் என்ற பொருளில் வழங்கு கின்றது. பிரித்தல், பிய்த்தல் என்பன ஒரு பொருள் சொற்கள். பிய்த்தல் > பிச்சல் > பிச்சை என்று வந்துள்ளது. இன்றும் பிரித்துக் கொண்டு போதலைப் பிச்சிக் கொண்டு போதல் என்று வழங்கக் காண்கிறோம். ஆதலின் பிச்சை என்ற சொல் தமிழ்ச் சொல்லே. இது வடமொழியில் சென்று ‘பிக்ஷா’ என்று உருமாற்றம் அடைந்துள்ளது. (பழந்தமிழ். 234)

பிஞ்சு: பிஞ்சு நிலையிலும் வாழைக்குக் ‘கச்சல்' என்றும், மாவிற்கு 'வடு' என்றும், தென்னை பனைக்குக் 'குரும்பை' என்றும் பிறவற்றிற்குப் பிறவாறும் சிறப்புப் பெயர் குறித்தனர். (கழகப் பொன்விழா மலர். 49)

பிடா: பிடா வென்பது முட் காலையுடைய தொரு புதல். நீண்ட காம்போடு கூடிய வெண்ணிறப் பூக் குலையாகப் பூப்பது. (கலி. 101. விளக்கம். பெருமழை.)

பிண்டம் : (1) பிண்டம் என்பது மணை போலப் பிறக்கும் அது.

(2) பிண்டம் பல பொருள் தொகுதி.

(புறம். 28. ப. உ.)

(தொல். சொல். 90. சேனா.)