8
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
உரையாசிரியரும், “நிலத்திறகு முன்னாகிய நீர்” என்று மற்றோர் உரையாசிரியரும், "நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய மூன்று தொழிலும் உடைமையின் முந்நீர்” என்று வேறோர் உரையாசிரியரும், "முந்நீர் - கடல். ஆகுபெயர். ஆற்று நீர், ஊற்று நீர், மேனீர், என இவை என்பார்க்கு அற்றன்று. ஆற்றுநீர் மேனீர் ஆதலானும், இவ்விரண்டும் இல்வழி ஊற்று நீரும் இன்றாம் ஆகலானும் இவற்றை முந்நீர் என்றல் பொருந்தியதன்று. முதிய நீர் எனின் ‘நெடுங் கடலுந் தன்னீர்மை குன்றும்' என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது. ஆனால், முந்நீர்க்குப் பொருள் யாதோ எனின் முச்செய்கை உடைய நீர் முந்நீர் என்பது. முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும், மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்" என்று இன்னோர் உரையாசிரியரும், "இச்சொல் முப்புறமும் தமிழகத்தை வளைத்துக் கிடக்கும் ஒருபெரும் நீர்ப் பரப்பைக் குறிப்பது என்பதனையும்; தீபகற்பமாகிய நிலவடிவைச் சுட்டுவது என்பதனையும் இடைக்கால உரையாசிரியரெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை” என முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் கூறியுள்ள சொற்பொருள் விளக்க ஆய்வு கற்குந்தோறும் கழிபேரின்பம் நல்குவதாம். இத்தகைய தொடர் ஆய்வால் சொல்லகத்துக் கால இட இன நோக்க - வரலாறுகளும் உள்ளடங்கிக் கிடப்பதைக் கண்டறிதல் எளிதாம்.
-
-
-
இத் தொகுப்புப் பணியைத் தூண்டியதுடன் துலங்கு மாறும் செய்த பேராசிரியர் முதலான செந்தமிழ்ச் செல்வர்கள் அனைவருக்கும், அவர்கள் வழங்கிய மணிப்பேழையை நூல்
வடிவில் உலவவிட்ட பதிப்பாளர்கள் அனைவருக்கும்
பெருநன்றியுடையேன். இதனை அழகொழுக அச்சிட்டுத் தமிழ் வளமாக்கிய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கு உள்ளார்ந்த அன்பும் நன்றியும் உடையேன். இப்பணியில் யான் ஈடுபட்ட காலையில் படியெடுத்தல் முதலாய பணிகளில் ஒல்லும் வகைகளில் எல்லாம் உதவிய என் என் இனிய அன்புச் செல்வி புலவர் கலைமணிக்கு அன்பான வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.
தமிழ் வெல்க!