பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

29

சொல் இவ்வளவு பழைமை வாய்ந்ததாயினும் பிங்கலந்தை என்ற பழைய தமிழ் நிகண்டில் அரி என்ற வடிவம் காணப்படுகின்றது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய துளுவத்திலும் ‘அரி' என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்தில் இன்றும் அரிசியை ‘அரி' என்றே குறிக்கின்றார்கள். ஆதலால் அரி என்பதே அரிசியின் ஆதிவடிவம் போலும். (தமிழ் விருந்து. 96.)

அரிதல் : அரிதல் வெட்டுதல் அல்லது அறுத்தல். வாழைக்காய் அரிந்தாள்’; ‘பழத்தை அரிந்து கொடு' எனுஞ் சொற்றொடர்களில் அப்பொருள் தெற்றென நிற்றல் காண்க. ‘செல்லரித்த ஏடு'; ‘பூச்சி அரித்த பயிர்’; ‘அரிசி அரித்தல்' (கல் பிரித்து ஒழுக்குதல்) ‘அரிக்குதல்’ (வருத்துதல்) என்பனவும் அஃதே உணர்த்தும். ஆதலின் அரிதல், அறுத்தல் ஒரே பொருளைக் குறிக்கும் இருசொற்களாம் என்பது பெற்றாம். நெல் புல் முதலியவற்றை அறுக்கும் வாளை அரிவாள் என்பதும், அறுத்து ஒன்றாகத் திரட்டப்பட்ட நெற்கதிர்களை அரிகள் என்பதும் நாம் மேலே விளக்க முயன்றதைத் தெளிவாக்கு கின்றதன்றோ! அங்ஙனமாயின் ஒரே அடியினின்றும் பிறந்த சொற்கள். (அரி, அறி) நாளாவட்டத்தில் தோற்றப் பொருளி னின்றும் விரிந்த வேற்றுமை உடையனவாய் வழங்கத் தலைப் பட்டபோது பொருளுக்கு இடையூறு நேராவண்ணம் தமிழ்ப் பெரியார் அச்சொற்களை ஏற்றவாறு திருத்தி அமைத்திருக்க வேண்டும். (செந்தமிழ்ச் செல்வி - சிலம்பு. 2: 155 - 156.)

அரிதாள் : இருவி நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரி தாள். கட்டை சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள். தூறு தென்னை, பனை முதலியவற்றின் அரிதாள். முருடு வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள். (சொல். கட். 65.)

அரிமாநோக்கு : அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்கு மிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குவது போல இறந்ததனோடும் எதிர்வதனோடும், இயைபுபடக் கிடப்பது. (நன். 18. மயிலை.) (இறையனார். 4. நக்.)

அரும்பு : அரும்பு, மல்லிகை முல்லை முதலியவற்றின் அரும்புபோல் சிறிதாயும் கூராயுமிருப்பது: மொட்டு, அடுக்கு மல்லிகை நந்தியாவட்டம் முதலியவற்றின் அரும்புபோல் சற்றுப் பெரிதாயும் மொட்டையாயுமிருப்பது; முகை, தாமரை சதுரக் கள்ளி முதலியவற்றின் அரும்புபோல் பெரிதாயிருப்பது.

(சொல். கட். 67.)