பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

87

அன்புப் பெற்றோர்க்குப் பிறந்த மைந்தன் தானா? தனக்கு எய்தும் துயரத்தை அறிந்தவன் பிறருக்குத் துயர்செய்ய முந்துவானா? உந்தும் உணர்ச்சியால் எழுவானா? இவனை மனிதன் - மனத்தை உடையவன் - என்று எவ்வாறு கூறமுடியும்.

ஒருவனுக்குக் கிறுக்குப் பிடித்து விடுகிறது. அவன் ஏதேதோ பேசுகிறான்; உளறுகிறான்; சிலரை வெருட்டுகிறான்; சிறுவர் களால் வெருட்டவும், 'கிறுக்கன்' எனப் பேசவும் படுகிறான். ஆனால் போர்க்கிறுக்கர்கள் இருக்கிறார்களே! அவர்கள் நிலைமை மூளைக் கிறுக்கர்கள் நிலைமை போலா உள்ளது?

பழிகாரனுக்குப் பாராட்டு :

போர்க் கிறுக்கன் ஏவல் கேட்க நாடே காத்துக் கிடக்கிறது; படைகளும், பக்கத் துணைகளும் காத்துக் கிடக்கின்றன; அவன் கண்சாடை காட்டிவிட்டால் போதும்; அவன் பகைநாடும், படை நடக்கும் நாடும் சுடுகாடாக மாறிவிடுகின்றன; கொள்ளையடிக்கப் பெற்ற கோநகரங்களாகி விடுகின்றன; இவ்வளவும் ஆகிய பின்னராவது போர் வெறியனுக்குக், 'கொள்ளைக்காரன்,' 'கொலைகாரன்,' 'கொடியன்' என்னும் ஒரு சொல் உண்டா? அவன் 'வீரன்' என்றும், 'வேந்தன்' என்றும், 'படைத் தலைவன்' என்றும், 'பாராள்வோன்' என்றும், 'கடவுளின் திருவருட் பிறப்பாளன்' என்றும், 'கருணை வள்ளல்' என்றும் அல்லவோ பாராட்டப்படுகின்றான்! அவனுக்கு வெறி மேலும் மேலும் ஏறிச் செல்லாமல் இருக்குமா?

"இயற்கையாகவே குறும்பு மிக்கது குரங்கு; அது நெருப்பிலே வீழ்ந்து, வெறிகொண்டு விடுகிறது. அந்நிலையில் அதனைத் தேள் கொட்டுகிறது; பாம்பு தீண்டுகிறது. இவை போதாவென்று அக்குரங்கு கள்ளைக் குடித்துப், பச்சை மிளகாயையும் கடிக்கிறது! அப்பொழுது அதன் வெறி எத்தகையதாக வளர்ந்து இருக்கும்? அதன் கையில் கொள்ளி அந்நிலையில் அகப்பட்டால் விளைவு என்னாம்?" பாராட்டுப் பெறும் போர் வெறியர்கள் இக் குரங்கு போலவே உள்ளனர். அவர்கள் பிறப்பால், அவர்கள் கண்பட்ட நாடு நகரங்கள் எல்லாம் தீப்பற்றி எரிக்கப்பெற்ற காடுகள் போல் கொடுங்காட்சி வழங்குகின்றன!

1. பெருந்தொகை: 260; 262.