பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

நிமிர்ந்து நடக்கும் வண்ணம் உதவும் குறள் நூலை அருளினார். அதன்கண் காணக்கிடக்கும் அமைதிக் குறிப்புக்கள் அனைத்தையும் காண்பதும் காட்டுவதும் நம் கருத்து அன்று எடுத்துக்கொண்ட தலைப்புக்கேற்பச் சிலவற்றைக் காண்போம்.

இனிய இல்லறம் :

"இல்லறம் தூய பளிங்கு நீர்ப்பொய்கையாக விளங்க வேண்டும்; அங்கு இன்பத் தென்றல் தவழ வேண்டும்; அன்பு ஊற்றுக் கண்திறந்து வற்றாமல் பெருகவேண்டும்; அருள்மடை திறந்து பாய்ந்து செல்லல் வேண்டும்; புதல்வர்கள் ஆகிய பூக்கள் பொலிவுற விளங்கவேண்டும்; இன்சொல் ஆகிய தேன் பெருக் கெடுக்க வேண்டும்; விருந்தினர், வறியவர், இரவலர் என்னும் வண்டுகள் வந்து நலம் பெறுதல் வேண்டும்; அழுக்காறு, அவா முதலாகிய மாசுகள் சேராது இருத்தல் வேண்டும். புகழ் என்னும் மணம் பரவுதல் வேண்டும்" இது வள்ளுவர் காட்டும் இல்வாழ்வுத் தொகுப்புரை.இல்வாழ்வில் இத்தன்மைகள் அனைத்தும் அமையப் பெற்றால், இன்ப உலகமே இவ்வில்லறம் தான் என்பதற்குத் தடையுண்டோ?

வலியவனுக்கு வலியவன்:

வலியவன் ஒருவன் தன்னிலும் மெலிய ஒருவனை அடிப்பதற்குக் கையை ஓங்குகின்றான். ஓங்கிய கையைக் கீழே இறக்குமுன் ஓடிவந்து நிற்கிறார் வள்ளுவர். "வீரனே! அன்பனே! நான் சொல்லுவதைச் சிறிதுகேள். நீ இப்பொழுது ஓங்கி இவனை அடிக்கப் போகிறாய் அல்லவா! இவன் உன்னிலும் வலுக் குறைந்தவன் என்பதால் தானே துணிந்து கை தூக்கினை? உன்னினும் வலியவனாக இவன் இருப்பானேயானால் உன்கை இவ்வளவு உயர்ந்திருக்குமா? நீ உன்னைப் பார்க்கிலும் வலிய ஒருவன் முன் இந்நிலைமையில் நிற்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்.அதன் பின் உன் விருப்பம் போல் செயலாற்று” என்றார். ஏறும் உணர்ச்சி இறங்கியது. வேண்டுவது அவ்வளவு தானே!

1.குறள் : 250. 2.குறள் : 318; 316.