பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

போக்கவும் விருப்பமிக்க விளையாட்டாகவும் கொண்டவர். அடிக்கும் கோலுக்கும் அஞ்சாமல் எதிர்த்துத் தாவும் ஆடரவம் போன்றவர். இத்தகைய படையும், வலியும் வாய்ந்தவன் அமைதித் தூது அனுப்பும் செயல் மதிக்கத் தக்கது. அமைதியும் சரி, இன்னா செய்யாமையாகிய 'அகிம்சை'யும் சரி, வீரர்களின் படைக் கருவிகளே அன்றிக் கோழைகளுடையனவாக இருக்க முடியா. தொண்டைமானினும் அதியமான் மெல்லியனாக இருந்து அமைதித் தூது அனுப்பினான் எனில் அது அச்சத்தின் பாற்பட்டதே ஆம்; அல்லது, தன்னலத்தின் பாற்பட்டதேயாம். வலியவன் அமைதித் தூது அனுப்புவதோ அருளின் பாற்பட்டது. அன்றியும், பொதுநலத்தின் பாற்பட்டதும் ஆகும்.

காஞ்சியில் கவிப்பெருமாட்டி:

ஒளவையார் காஞ்சிமாநகரை அடைந்தார். அவர் வருகையின் நோக்கத்தைக் குறிப்பாக அறிந்தான் தொண்டைமான். தன் ஆற்றலையும், படைக்கருவிகளையும், அரணையும் காட்டுவான் போலப் படைக்கலக் கொட்டிலுக்கு ஔவையாரை அழைத்துச் சென்றான். வரிசை வரிசையாக வனப்புற அடுக்கப்பெற்ற கருவி களைத் தானே முன்னின்று காட்டினார். படைக்கருவிகளைக் கண்டு களித்த ஒளவையார் தொண்டைமான் குறிப்பை அறியாதவரா?

"வேந்தே! இங்கிருக்கும் கருவிகள் மிக அழகியன; மயில் தோகை அணியப் பெற்றுள்ளன; மாலை சூட்டப் பெற்றுள்ளன ; நெய் தடவப் பெற்றுள்ளன; பிடிகளும் அழகுறச் செய்யப் பெற்றுள்ளன. காவல் மிக்க இடத்தில் அடுக்கிவைக்கப் பெற்றுள்ளன. உள்ளவற்றை யெல்லாம் ஊருக்கு உதவியவனும், இல்லோரை யெல்லாம் இனிய உறவாகக் கொண்டவனும் ஆகிய அதியமான் படைக்கருவிகள் அடிக்கடி போர்க்களம் சென்று பகைவர்களைத் தாக்குதலால் பக்கமும் நுனியும் அழிந்து கொல்லனது பட்டறையிலே காவலற்றுக் கிடக்கின்றன" என்றார்.

தொண்டைதான் படைக்கருவிகளைப் புகழ்வது போலவும், அதியமான் படைக்கருவிகளை இகழ்வது போலவும் ஒளவையார் கூறினால் கூட, அவர் சொல்லில் அடங்கியுள்ள உட்கருத்து என்ன? "தொண்டைமான்! உன்படை உதவாப் படை; அழகுப் பொருளாக அமையும் படை! அவ்வளவோ; அதியமான் படையோ

1. புறநானூறு : 95.