பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

123

அவருக்கு இருந்தது. ஆம்! தன்னலம் அற்ற இடத்தில்தான் பொது நல வெள்ளம் பெருக்கெடுக்க முடியும்.

அன்னமும் கன்னமும் :

புத்தர் பேரருளாளர்; உலக அமைதிக்கு வழி கண்ட பெருந்தகை; இளம் பருவத்திலேயே மன்னவர் மைந்தர்கள் விளையாட்டாகக் கருதும் வேட்டையாடுதலைக் கொலைத் தொழிலாகக் கருதினார். அவ்விளம் பருவத்தில் தம் உறவினனான தேவதத்தன் ஏவிய அம்பின் தாக்குதலுக்கு ஆட்பட்டுக் கீழே வீழ்ந்த அன்னத்தை எடுத்துத் தன் கன்னத்தோடு அணைத்துப் பேரருள் காட்டினார். “என் அம்பு பட்டுக் கீழே வீழ்ந்தது; அது எனக்கே உரிமையானது" என்று தேவதத்தன் வழக்காடிய போது, "அதன் உயிர் நீங்கி இருக்குமானால் அம்பெய்த உனக்கு அஃது உரிமை; அதற்கு உயிர் உள்ளதால் அதனைக் காக்க விழையும் எனக்கே உரிமை" என்று பதில் உரைத்தார்; அன்னத்தின் ஆருயிரைக் காத்தார். அவ் வருள்நெறி பின்னர்ச் செய்த தொண்டு பெரிது. பழிமிக்க பலி :

பிம்பிசார மன்னன் தெய்வத்தின் பெயரால் கொடுக்கும் உயிர்ப்பலியை ஒழிக்க முயன்றார் புத்தர்.

1 “வாழும் உயிரினை வாங்கிவிடல்-இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்

வீழும் உடலை எழுப்புதலோ-எந்த

வேந்தன் நினைக்கினும் ஆகாதையா?”

என்று அருளுரைத்துக் கொலை வேள்வியைத் தடுத்து நிறுத்தினார்.

கொளதமர் காடுகளில் அலைந்து திரிந்த வேளைகளில் அறியாத மக்களால் அல்லல் பல அடைந்தார். அவரைக் கிறுக்கர் என்று கருதிக் காறி உமிழ்ந்தனர்; மண்ணையும் கல்லையும் எடுத்து அவர்மேல் வீசினர்; சுடுகாட்டில் எலும்புக் குவியல்கள்மேல் அவர் படுத்திருந்த வேளையில், காதுத் துளைகளில் வைக்கோலைச் செலுத்திக் குடைந்தனர். இத்தகைய துயரங்களின் இடையேயும் அவர் காட்டிய பொறுமை கடலினும் பெரிது. அவர் சொல்கிறார்: "எனக்குத் துன்பம் செய்த அவர்கள் மேல் சிறிய அளவில்கூடத் தீய எண்ணம் உண்டாகியதாக எனக்கு நினைவில்லை!”

1. ஆசிய சோதி.