பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

125

கொண்டார். தாமே அங்குலி மாலனைத் தேடிச் சென்றார். புத்தர் மேல் பாய்ந்து தாக்கி விரலை வெட்டுவதற்கு வாளை ஓங்கினான். அருள் வழியும் புத்தர் திருமுகத்தைக் கண்டு தன்னை மறந்து மயங்கினான். அவர் அருள் மொழிகளைக் கேட்டான், தூய துறவியாக மாற்றப் பெற்றான். கொன்றொழிக்க வீரரை ஏவிய கோசல மன்னனே அங்குலி மாலனைக் கண்டு அவன் திருவடி களை வணங்கிச் செல்கிறான். என்ன விந்தையான செயல்கள்! ஆயுதப் போரால் நடத்த முடியாத மாற்ற நிலை இது. இதனைச் சாதிக்க வல்லது அன்பும் அருளும் கலந்த அமைதிப் போரேயாம். தண்ணீர்க்குச் செந்நீர்:

உரோகிணி ஆற்று நீரைப் பயன்படுத்துவதன் தொடர்பாக எழுந்தது ஒரு தகராறு. அத் தகராறுக்கு ஆட்பட்டவர்கள் புத்தரின் தந்தை வழியினரான சாக்கியர்களும், தாய்வழியினரான கோலியர் களும் ஆவர், இதனைக் கேள்விப்பட்டார் உலக அமைதிக்கெனத் தோன்றிய பெருமான் ஓடோடியும் அவர்கள் முன்வந்து தோன்றினார்.

"ஒரு சிறிய ஆற்று நீரின் உரிமைக்காக இத்துணைப் பேர்கள் பலியிடப்பட வேண்டுமா? தண்ணீரின் உரிமையைக் காப்பதற்காகச் செந்நீரை ஆறாக ஓடவிடவேண்டுமா? ஆத்திரப் படாமல் அமைதி வழியைப் பேணுங்கள். இரண்டு பக்கங்களிலும் உள்ள பெரியவர்கள் பேசித் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்" என்று வேண்டினார் புத்தர். போர் ஒழிந்தது; பகையும் அகன்றது.

பிறர் பழி பேசேல் :

புத்தர் தம்மைச் சேர்ந்தவர்களுள் எவரேனும் பிற மதத்தைப் பழிப்பதை ஏற்றார் அல்லர். அவ்வாறு பழிப்பதைத் தம் சமயத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்று கருதினார். 'ஒருவன் அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் காறித் துப்புவது போன்றது பிற சமயங் களைப் பழிப்பது; அந்த எச்சில் வானத்தைக் களங்கப்படுத்தாது. ஆனால் அது திரும்பிக் கீழே வந்து துப்பியவனையே கறைப் படுத்தும்" என்றார். இத்தகைய சமய அறநெறி செயலளவில் உலகில் நிலைபெற்றிருந்தால், எத்துணையோ போர்கள் தோன்றி யிரா என்பதை வரலாறறிந்தோர் உணர்வர்.