பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சமயச் சான்றோர் - II

சிலுவைப்பாடு:

இயேசு பெருமான்

அறக்கடல்; அறிவுச்சுரங்கம்; அமைதிக் குன்றம்; அன்பு வெள்ளம்; அருள் தெய்வம்; நல்லனவே பொழியும் கொண்டல்; இன்னலம் வழங்கும் தென்றல்; ஆம்! அவர் தாம் இயேசு பெருமான்.

ஏழைகளுக்குத் தோழராகத் திகழ்ந்தார்; நோயாளருக்கு மருத்துவராக வாழ்ந்தார்; சீடர்களுக்குக் குருவாக விளங்கினார்; பொதுமக்கட்குப் போதகராக இலங்கினார்; மெய்யுணர்வாளருக்குத் தேவகுமாரராக நின்றார்; எதிர்த்து நின்றோர்க்குப் பொறுமை மலையாக இருந்தார். இத்துணை நயத்தக்க தன்மைகளும் ஒருங்கே பெற்றிருந்தமைக்காக அவர் பெற்ற பரிசு சிலுவைப் பாடு!

துயரச் சூழல் :

இயேசு பெருமான் பிறக்கும் போதே "உலகத்தார் துயர் துடைக்கப் பிறந்தவர் - உலகத்துக்காகப் படாத அல்லல் பாடுகள் அனைத்தும் படப்பிறந்தவர் என்பதனை வெளிப்படுத்தத் தக்க சூழல் தொடங்கிவிட்டது.

உலகில் வாழும் மக்கள் தொகைக் கணக்கு எடுக்க வேண்டும் என்று உரோமாபுரியில் இருந்து ஓர் ஆணை பிறந்தது. செசார் என்னும் மன்னவன், "யூத மக்கள் அனைவரும் அவரவர் பரம்பரை ஊர்கட்குச் செல்லவேண்டும்; அங்கே பெயர்ப் பதிவு செய்து கொண்டு மீளவேண்டும்" என்று பறையறைந்தான். இவ்வாறு பறையறையப் பெற்றது நாசேரத்து என்னும் ஊரில். மன்னவன் ஆணையை மறுக்க முடியுமா? மக்கள் வெள்ளம் பரம்பரை ஊர்கட்குக் கிளம்பியது. அவ்வாறுபுறப்பட்டுப் 'பெத்லகேம்' என்னும் ஊருக்குப் போகின்றனர் கணவன் மனைவியர் ஆகிய இருவர். அவர்களே அன்னை மரியும், அருள் சூசையப்பரும் ஆவர்.