பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

153

புறப்பட்டார். அந்த இளஞ்செல்வி செய்த தொண்டு உலகம் போற்றும் தொண்டாயிற்று. பகலிலே அயராமல் பணியாற்றிய அவர் இரவில் விளக்கேந்திக்கொண்டு, கட்டில் கட்டிலாகச் சென்று பணியாற்றினார். நோயாளர்க்குப் பரிவூட்டிய அப் பெருமாட்டியை நோய் அணுக்கள் பற்றாமல் விட்டனவா! நல்லோர் அல்லோர் என அறியாமல் கேடு செய்யும் உயிர்கள் ஆயிற்றே அவை! நோயுடன் இங்கிலாந்துக்கு வந்தார் நைட்டிங்கேல்! வந்தும் ஓயாத் தொண்டாற்றினார். அத்தொண்டின் இடையே பேரமைதி கொண்டார் அச்செல்வப் பெருமாட்டி.

சாவா உடம்பினார்:

இவ்வாறு தம்மை அமைதிப் பணிக்குத் தந்த அருளாளர் பலர். அவர்கள் வரிசை நீளமானதும் கூட, அத்தகையவர்கள் வரிசை நீள நீளத்தான் உலகோர் அவலம் ஒழியும். மோது போர் களும், முட்டும் பகைகளும் தணியும். இடுக்கண்களும், இன்னாச் செயல்களும், பிணிநோயும் எளிதில் விலகும். உலகைக் கப்பிப் பிடித்துக்கொண்டு இருக்கும் பகைமூட்டமும் அகன்றோடும். பூசற் கொடுங்குழிகள் மூடப்பெறும்.

தன்னுயிர் கொண்டு மன்னுயிர் பேணி நிற்போரே இறைவனுக்கு இடையறாத் தொண்டு செய்தவர்கள் ஆவர். இறைவன் இன்னருளுக்கு உரியர்களும் ஆவர். அவர்களே என்றும் சாவாத எழில் உடம்பு பெற்றுத் திகழ்பவர்!