பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

161

அறையைப் பறிகொடுத்தவர்க்கு இந்நிகழ்ச்சி எவ்வாறு இருந்தி ருக்கும்! பெருமூச்சுவிட்டார். முரடராய அவரை ஒன்றும் செய்ய இயலாதென்று உரிய நடவடிக்கை களில் இறங்கினார்.

பிறர் அறையைத் தம்மதாக்கிக் கொண்டவர் தம் குற்றத்திற்காக அறமன்றத்தின் குற்றக்கூட்டிலே நின்றார். அப்பொழுது நடுவரிடம் "இவருக்குரிய ஓர் அறையைக் கவர்ந்து கொண்டதற்காக என்னைக் குற்றக் கூண்டில் நிறுத்தி விட்டீர்கள்; ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கவர்ந்து கொள்ளும்போது உங்களால் தடுத்து நிறுத்த முடிகிறதா? அந்நாட்டைக் குற்றக் கூண்டில் ஏற்ற முடிகிறதா?" என்று வினாவினார். "வலியவருக்கு ஒரு நீதி; எளியவருக்கு ஒரு நீதியா? தனி வாழ்வுக்கு ஒரு நீதி; பொது வாழ்வுக்கு ஒரு நீதியா?" என்று மேலும் அடுக்கினார்.நடுவரையும், நல்லவர்களையும் ஓர் அசைப்பு அசைத்தது அவர் வினா. அங்கு எழுப்பப் பெற்ற வினா பலவிடங்களிலும் எதிர் ஒலித்தது. அவ்வொலி வீணாகவில்லை. நல்ல தொண்டு செய்யத் துணையாயிற்று.

உலக அமைப்புக்கள்:

"எந்த வல்லரசும் இணைந்த முயற்சியால் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும். போரில் இறங்குதல் கூடாது. அமைதி முயற்சி வெற்றியளிக்காவிட்டால், அதனை ஒரு நடுநிலைக் குழுவின் முடிவுக்கு ஒப்படைத்துவிட வேண்டும்" என்னும் திட்டத்துடன் 1919இல் நிறுவப்பெற்றது சர்வதேச சங்கம்.

போராட்டம் எப்பொழுதும் ஒரு படிப்பினையைத் தரத் தவறுவது இல்லை. ஆனால் மனிதன் தான் தகவற்ற உணர்ச்சி களால் அப் படிப்பினையை மறந்து போகின்றான். உள்ளம் மரத்தும் போகின்றான். சர்வதேச சங்கத்தைத் தோற்றுவித்த நாடே பங்கெடுக்கத் தவறியது. ஒப்பி நின்ற நாடுகளும் ஒவ்வொன்றாக விலகிக் கொண்டன. பெயரளவில் சங்கம் இருந்தது.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. மீண்டும் பெருந் தலைவர்களைச் சிந்திக்க வைத்தது. பிரிட்டனின் போர்க்கால முதல்வர் சர்ச்சிலும், அமெரிக்கத் தலைவர் பிராங்ளின் ரூசுவெல்ட்டும் அட்லாண்டிக் மாகடலில் கூடிப் பேசி ஓர் உரிமைப் பட்டயத்தை உருவாக்கினர். அதன் பின்னர் இருபத்தாறு நாடுகள் அதுபற்றிக் கூடிக் கலந்து பேசின; பல இடங்களில், மாநாடுகள் கூடின; பின்னர் நாற்பத்து இரண்டு நாடுகள் பங்கு கொண்டன.