பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் அன்பின் உறவு

"உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்'

1985 ஆம் ஆண்டு சனவரி திங்கள் பவானியில் இருந்த என்மகளார்திலகவதியைப் பார்க்கச் சென்றேன்.

மதுரையில் இருந்து பவானிக்குச் செல்லும் யான், ஈரோடு சென்று, வண்டிமாறிச் செல்ல வேண்டும்.

ஈரோட்டுப் பெருமகனார் வேலா அரசமாணிக்கனாரை முன்னரே குறளியம் இதழாலும் அஞ்சல்களாலும் தொடர்பு கொண்டுள்ளேன். அத்தொடர்பை ஏற்படுத்திய ஏந்தல் அவரே.

சேலத்தில் திருக்குறள் மாநாடு ஒன்றனை அரிமாப்புலவர் மி.மு.சின்னாண்டார் பெரிய அளவில் நடத்தினார். அவ்விழாவில் அரச மாணிக்கரைக் காணவும் கலந்துரையாடவும், கருத்தால் ஒன்றவும் வாய்த்தன. அப்போது, குறளாயத்திற்கு வாய்த்தபோது வரவும், குறளியத்திற்குக் கட்டுரை வரையவும் வேண்டினார். அவரை நேரில் காணும் வரை இருந்த அரும்பு நிலை முகையாய்த் திரண்டமையால், ஈரோட்டில் சென்று அரசமாணிக்கரைக் கண்டு செல்லும் திட்டம் கொண்டேன்; சென்றேன்; கண்டேன்.

அரசமாணிக்கனாருடன் பட்டுக்கோட்டை தங்க வேலனாரும் இருந்தார். என்னை முன்னரே கேள்விப்பட்டிருந்த அவர் "பல காலமாக ஏமாற்றினீர்கள் இன்று காண வாய்த்தீர்கள்" என்று கூறித் தழுவினார்.

புலவர் தங்கவேலர் பழுத்த புலமையர்; பாவன்மையர்; வெண்பாவில் புலி; குறளியம் குறளாயத்திற்கெனவே தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்; அவர்தம் சிவப்பழமாம் தோற்றப் பொலிவும் முதுமைக் கோலமும் உயரிய நேய உளமும் பளிச்சிட்டன. அவர் என்னை அழைத்துக் கொண்டு வேலாவினிடம் சென்றார். அறிமுகப்படுத்தினார்.