பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருக்கோபுரங்கள்

கண் : "கோயில் முழுதும் கண்டேன் உயர்

கோபுரம் ஏறிக் கண்டேன்"

என்று திருப்பதிகளைக் காண்பார் கூறுவது உண்டு.

நாம் அப்படிக் கூறிக் கொள்ளுமாறு கோபுரத்தை ஏறிப் பார்க்கவில்லையே!

பொன் : பார்க்க வேண்டும்! பார்க்க வேண்டும். நாம் நேரே தெற்குக் கோபுரத்திற்குப் போகலாம். இக் கோயில் கோபுரங்களில் உயரமானது இதுவே. இதன் உயரம் 48 மீட்டர். அடிமட்டத்தில் இதன் நீளம் 32.4 மீட்டர். அகலம் 20.1 மீட்டர். இதில் பழுது பார்த்துத் திருப்பணி செய்வதற்குச் சாரம் கட்டினர். அச் சாரம் கட்டுவதற்கு மட்டும் நான்கு திங்கள் ஆயினவாம். 40,000 உரூபா பெறுமானமுள்ள சவுக்கு மரங்கள் வேண்டியிருந்தனவாம்!

கண்

இத் திருப்பணி செய்யவே இவ்வளவு காலம் சாரம் போடவும், இவ்வளவு செலவில் மரம் வாங்கவும் நேர்ந்திருந்தால் இதனைக் கட்டி முடிப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டியிருக்கும்? எவ்வளவு தொகை செலவாகியிருக்கும்? இதனைக் கட்டிய பெருமகன் யார்?

பொன் : இதனைக் கி.பி. 1559 இல் சிராமலைச் செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவர் கட்டுவித்தார். இவர் மக்கள் செவ்வந்தி வேலப்பச் செட்டியாரும், திருவம்பலச் செட்டியாரும் பல திருப்பணிகள் இக் கோயிலில் செய்துள்ளனர்.

கண்

அவ்வாறானால் குடும்பமே இக் கோயில் பணியில் ஈடுபட்டுள்ளது. 'சிராமலை' என்பது திருச்சிராமலை எனப்படும் திருச்சி! திருச்சியில் இருந்த அவர், இம் மதுரைத் திருக்கோயில் பணியில் ஈடுபட்டுள்ளார்.