156
―
இளங்குமரனார் தமிழ்வளம் 31
இவற்றை முடியாக்கி அணிந்தால் சிறக்கும்" என்று கூறி அவற்றை விற்றுவிட்டு மறைந்தான். வந்தவர் கடவுளே என்றறிந்து அம்மாணிக்கங்களைக் கொண்டு முடிசெய்து முடிசூட்டு விழா நடத்தினர்.
18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது
பாண்டியருள் ஒருவன் அபிசேகபாண்டியன் என்பவன். அவன் சித்திரை மாதத்துச் சித்திரை நாளில் கோயிலில் முதற்பூசை செய்வான். அதன் பின்னரே இந்திரன் பூசை செய்வது வழக்கம். அவ்வழக்கப்படி, பாண்டியன் செய்த பூசைக்கு நெடும் பொழுதாயிற்று. இந்திரன் காத்துக் கொண்டிருந்து தன்பூசையை முடித்துக்கொண்டு சென்றான். அவன் காலந்தாழ்ந்து வருவதைக் கண்ட வருணன், காரணம் கேட்க நிகழ்ந்ததைக் கூறி மதுரைப் பெருமான் பெருமையையும் எடுத்துரைத்தான்.
சொக்கர் பெருமான் சிறப்பை அறிய எண்ணிய வருணன் கடலை ஏவி மதுரையை அழிக்குமாறு கட்டளையிட்டான். கடற்பெருக்கைக் கண்ட பாண்டியன் அச்சமுற்று இறைவனை வேண்டினான். இறைவன் அருள் பாலித்துத் தன் சடையில் உள்ள நான்கு மேகங்களைக் கடல் நீரைவற்றச் செய்யுமாறு ஏவினான்.உடனே அம் மேகங்கள் கடல்நீரை முற்றாகப் பருகின. மதுரை கடல் அழிவில் இருந்து தப்பியது.
19. நான்மாடக் கூடலானது
மதுரையைக் கடல் நீரால் அழிக்க முடியாமல் தோற்ற வருணன் மேகங்களையெல்லாம் அழைத்து எல்லாக் கடல் நீரையும் குடித்து மதுரையின்மேல் பொழியுமாறு கட்டளை யிட்டான். இதனைக் கண்ட அபிசேக பாண்டியனும் மக்களும் சொல்லொணாத் துன்பமும் அச்சமும் கொண்டனர். சொக்கலிங்கப் பெருமானை அணுகி முறையிட்டனர். இறைவன் தன் சடையில் இருந்த நான்கு மேகங்களையும் மாடங்களாய் அமைந்து மழையைத் தடுத்துத் காக்குமாறு கட்டளையிட்டான். அதனால் தோற்றுப்போன வருணன் வெட்கமுற்றுத் தன் குற்றமுணர்ந்து வருந்தினான். பொற்றாமரைக் குளத்தில் நீராடி, இறைவன் தன்னைப் பொறுக்குமாறு மன்றாடினான். இறைவன் அருளால் வருணனுக்கு முன்பு இருந்த வயிற்று வலியும் நீங்கியது.மதுரைக்கு நான்மாடக்கூடல் என்னும் பெயரும் உண்டாகியது.