1. முன்னுரை
மைத்துனர் இருவர்; அவருள் பொன்னப்பன் ஒருவன்; கண்ணப்பன் மற்றொருவன். இருவரும் நெடுநாள் கழித்துச் சந்தித்துக் கொண்டனர்.
பொன்னப்பன் மதுரைக்குப் போய்த் திரும்பியவன். கண்ணப்பன் மதுரைக்குப் போகவில்லை. ஆதலால் மதுரைச் சிறப்புகளை அறிந்த பொன்னப்பன் கண்ணப்பனிடம் “மதுரை பாராதவன் மாபாவி" என்றான். இவ்வுரை கண்ணப்பனைத் திகைக்க வைத்தது. தலைகுனிந்த கண்ணப்பன் நொடிப் பொழுதுக்குள் நிலைமையைச் சரிப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தான். "திரும்பிப் பாராதவன் தீம்பாவி”என்றான். இந்த அடி விழுமென அறியாத பொன்னப்பன் கண்ணப்பனைக் கட்டித் தழுவிக் கொண்டு மகிழ்ந்தான்.
"நான் மதுரையைப் பார்த்து, மாபாவத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும். நீ திரும்பிப் பார்த்துத் தீம்பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். எப்பொழுது போகலாம்?”
"களவுக்கு ஒருவன்; கல்விக்கு இருவர்" என்பது பழமொழி. நாம் ஒரு புதுமொழி உண்டாக்கிக் கொள்வோம்: 'திருட்டுக்கு ஒருவன்; திருக்கோயிலுக்கு இருவர்' என்பது அது. கண்டறிந்தவன் ஒருவன் வழிகாட்டினால், காணாதவன் பயன்பெறுவான். காணாத இருவர் ஓரிடத்தைக் காணப்போவது 'குருடும் குருடும் கூடிக் குருட்டாட்டம் ஆடிக் குழிவிழுமாறே' என்பது போலத் தானே இருக்கும்? நாம் இருவருமே மதுரைக்குப் போகலாம் என்று முடித்தான் கண்ணப்பன்.
கோயிலுக்குப் போகும்போது சுமையோடு போகக் கூடாது" என்றான் மதுரைக்குப் போய்வந்த பொன்னப்பன். 'ஆம்! காலம் மாறிவிட்டது. கட்டுச்சோறு பெட்டி படுக்கை வையெல்லாம் வேண்டியவை இல்லை. சட்டைப்பை மட்டும் கனமாக இருந்தால் போதும்; மற்றவையெல்லாம் நகரத்தில் தேடிவருமே" என்றான் கண்ணப்பன்.