பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் -34

முதலியவற்றைப் பண்ணோடு பாடவல்ல) ஓதுவார்களை நியமித்தான். தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு அவன் அமர்த்திய ஓதுவார் நாற்பத்து எண்மர் என்பது அக்கோயில் கல்வெட்டு.

அவ்வோதுவார் முப்போதும், ஐம்போதும் திருக்கோயிலுக்கு வந்து திருப்பதிகம் ஓதுவார். அவர் ஓயாமல் ஒழியாமல் நாளும் பொழுதும் ஓதுவதால் ஓதுவார் எனப்பட்டனர். ஓதினார் அல்லர்; ஓதுகிறார் அல்லர்; அவை இறந்த காலமும் நிகழ் காலமும் ஆம். என்றும் ஓதுபவரை எதிர்காலத்தால் பெயரிட்டு முக்காலும் ஓதுவார் என்பதற்குப் பெயரீடு செய்தனர். மலை நிற்கும்; ஆறு ஓடும்; மழை பொழியும்; தேன் இனிக்கும் என்பவை

போல.

இடைவிடாமை :

66

ஓதுதல் = இடைவிடாது பயிலுதல்; இடைவிடாது கூறுதல், இசைத்தல் என்க.

கடல் அலை ஓயுமா?

அலை ஓய்வது எப்போது?

தலை முழகுவது எப்போது?”

என்பது பழமொழி. அலையோடு அலையாய்த் தலை முழுக வேண்டுவது தான் என்பது குறிப்பு. ஓயா அலைகடலை ‘ஓதக் கடல்' என்பது இலக்கிய ஆட்சி. அலை எழுச்சியை 'ஓதம்' என்பது பொதுமக்கள் ஆட்சி.

ஓதம்,ஒத்து

ஓதுவது யாது? ஓத்து. ஓதும் நூல் ஓத்து எனப்பட்டது. அதனை முறைப்பட அமைத்தல் ஓத்து முறை வைப்பு எனப்படும். உத்தி வகைகளுள் அஃது ஒன்றாம்.

ஓத்தை மறந்தாலும் மீள நினைவுக்குக் கொண்டுவர வாய்ப்பு உண்டு. ஆனால், ஓதியவன் ஒழுக்கத்தை இழந்து விட்டால் இழந்தவனே ஆவன் என்பது வள்ளுவம்.

“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்"

என்பது அது.