பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

வேர்ச்சொல் விரிவு

85

இணைந்தோ எரிந்தோ நிற்றல், இருபாலும் நலமில்லையே! அத்தகையரும், ஏற்கத்தக்க ஆய்வில் தலைப்பட்டு ஊன்றலே, தமிழ்த் தொண்டில் தலைப்படுவார் தனிப்பெரும் தலைக்கடன். அக்கடன், எள்முனையளவிலேனும் இச் சிறு சுவடியால் செய்யப் படுகின்றது எனின், அதனிற் பெரிய பேறு இல்லையாம்.

மாகறல் கார்த்தியேனார் 'மொழி நூல்', சொல்லாய்வில் முற்பட்டு பரிதிமாற் கலைஞரும் மறைமலையடிகளாரும் இரண்டு மூன்று கட்டுரை அளவில் தம் ஆய்வை நிறுத்தினர். ஞானப்பிரகாச அடிகளார் சொற்பிறப்பு அகராதியில் ஊன்றி நின்று முச்சிறுமடலங்கள் வெளியிட்டார். பாவாணர் சொற் பிறப்பாய்வில் ஆழமாய் ஓன்றி அருமணிக் கட்டுரைகளும் நூல்களும் யாத்தார். அகரந் தொடங்கி ஆசை மொழி ஈறாக ஓராற்றான் செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகர முதலிப் பணி புரிந்தார். ஆனால், பாவாணர் சொல்லாய்வுக் குறிப்புகளைத் திரட்டி அனைத்தையும் ஓர் ஒழுங்குறுத்தினால் அவ்வகர முதலியில் உள்ள சொற்களிலும் ஏறத்தாழ ஐந்து மடங்கு சொற்களுக்கு வேரும் விளக்கமும் எடுத்துக் காட்டும் கிட்டுகின்றன. ஐம்பான் ஆண்டுகளின் குறிக்கோள் உழைப்பும் அவ்வுழைப்பின் வளர்ச்சித் தெளிவிலையும் அவர்தம் படைப்புகளில் புலப்படு கின்றன.

இவ்வாய்வு, ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என அவரால் சொல்லப்படும் ஆழ்வேர் ஆய்வன்று; இன்னும் சொன்னால் வேர் ஆய்வே அன்று; அடிமரந் தொட்டுப் பிரியும் கவடும் கிளையும் கோடும் வளாரும் ஈர்க்கும் என வெட்ட வெளிப்படு சொல்லாய்வேயாம். ஆதலின், கல்லியெடுத்தல் அகழ்ந்தெடுத்தல் இவ்வாய்வில் இல்லை; தெரிந்தெடுத்தல் தேர்ந்தெடுத்தல் திரட்டியெடுத்தல் என்பனவே உண்டு. அவரவர் நிலையால் அவரவர் தெளிவால் ஆக்க இயன்றவை தாமே அவரவர் செயற்பாட்டுக்குரியவை! இந்நிலையில் இதுகால் தலைப்பட்டு உழைத்துவரும் அன்பர்கள் ஆர்வலர்கள் சிலருளர்; அவர்கள் பாராட்டுக்குரியர்.

"அகல் - சொல்லியல் நெறிமுறை" என்னும் என் நூல் முன்னே வெளிப்பட்டது. அதனைப் பாவாணர், மறைமலையடி களார் வழித் தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் உவந்து வரவேற்றனர்; பாராட்டி எழுதினர். அவ்வழியில் தொடர்ந்து கட்டுரைகள் வரினும் நூல் வந்திலதே எனப் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.