பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

105

தீராக்கடனும் இருத்தலால், அவர்க்குத் தம்முடம்பு பேணுதலும் சுமையாய் அமைகின்றதாம். அதனாலன்றே,

"மற்றும் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பும் மிகை”

என்றார் திருவள்ளுவர் (345). "இப்பரந் துடைத்தவர்" என்னும் கம்பர் வாக்கு (கடிமணப். 69), பரம் என்பதற்கு உடல் என்னும் பொருளுண்மை காட்டும்.

பரம்பரம் :

பரம்பரம் அப்பாலுக்கு அப்பாலாம் வீடுபேற்றைக் குறிப்பது உண்டு. 'பத்திசெய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்' என்னும் திருவாசகம் (2.119) இதனைத் தெளிவிக்கும். பரம்பரத்து உய்ப்பவன் 'பரம்பரன்' என்க. (திருவாய். 4.3:9)

ஒன்றற்கு மேல் ஒன்றாய் உயர்ந்து விளங்கிவருதல் 'பரம் பரை' எனப்படுகின்றது. 'சென்று சென்று பரம்பரமாய் எனவரும் திருவாய் மொழி (8.8:5) இதனைக் காட்டும்.

பரம்பு :

கல்லாஞ் சரளை பரவிக்கிடக்கும் வறண்ட நிலம் 'பரம்பு' எனப்படும். பரவிய நிலம் என்னும் பொருளில் பரம்பு ஆளப்படுவதும் உண்டு. "பரம்பெலாம் பவளம்" என்னும் கம்பர் வாக்கு (நாட்டுப். 2) நிலப்பரப்பை அதிலும் மருத நிலப்பரப்பைக் காட்டுவதே. வரம்பு வரப்பென வலித்தல் அடைவது போலப் 'பரம்பு' பரப்பென ஆகும். பரம்பு அளவு என்பதே பரப்பளவு ஆயது வெளிப்படை. பரப்பு என்பது செண்டு வெளி எனப் பொருள் தருதல் பெருங்கதையில் கண்டது (3.25 :10). செண்டுவெளியானது குதிரையோடும் வெளி, முற்றம் என்பன. பரம் படித்தல் :

ழவுத் தொழிலில் 'பரம் படித்தல்' என்பதொன்று. அது தொழி உழுது. குழைமிதித்தபின் பரம்புச் சட்டத்தால் சமனிலைப் படுத்தும் பணியாம். அதற்குரிய சட்டம், 'பரம்புச் சட்டம்' எனப்படும். இனிப் பலகையையே பரம்பாகப் பரப்பி அடிப்பதும் அல்லது இழுப்பதும் வழக்கே. அது 'பரம்புப் பலகை' எனப்படும். “குலப்பொன்னித் திருநாடர் பரம்படிக்க”

என்பது ஏர் எழுபது (26).