பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

117

வேறுபாடு உண்மை கருதி மூவடிவுற்றதாம். இது முன்னரே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணுக்குத் தலைவன் தரும் 'கையுறை' வேறு. அது அவள் கையில் பிறரறியா வண்ணம் சேர்ப்பது; தோழியும் அவளும் உயிரோரன்னர் ஆகலின் அவள் கையில் வழங்கித் தலைவி கையில் சேர்ப்பிப்பதும் கையுறையே. இவற்றின் வேறானது 'பரிசம்' என்பது வெளிப்பட விளங்கும்.

ஊரவர்க்கும் உரிமையர்க்கும் அறிவித்து அவர்கள் சூழ்ந்துள்ள அவையத்தில் அல்லது மன்றத்தில் மணமகன் வீட்டார் மணமகளுக்கு வழங்கும் கொடையே பரிசமாம். அகலத் தாலம் ஒன்றிலே மங்கலப் பொருள்கள் ஊர்வலமாய்ச் சூழ வந்து அவற்றை வழங்குதலும் - அவ்வழங்குதலும் குத்து விளக்கு வைத்து அதனைச் சூழப் பரப்பிப் பலரும் பார்க்க வைத்தலும் ஆகியவற்றை நோக்குவார் - பரிசையும் அறிவார் வளைவுப் பொருளையும் அறிவார்.

இனி இகலிப் பெறும் பரிசும், இகலாமல் போட்டி யிடாமல் -பெறும் பரிசிலும் பண்டு நிகழ்ந்த பான்மையை அறியின் இப்பெயர்ப் பொருத்தம் விளங்கும். கலைவல்லாரை யும் புலமையரையும் யானை மேல் வைத்து உலாவரச் செய்தும், அவர்களுக்குரிய கொடைப் பொருள்களையும் உடன் உலாவரச் செய்தும், அவற்றைத் தாலத்திலே வைத்து வழங்கியும் செய்த சீர்மையே பரிசு, பரிசில் என்னும் பெயர்களை வழங்கிற்றாம். பரிசம் போடுதல், பரிசில் வாழ்க்கை, பரிசில் கடாநிலை, பரிசில் விடை, பரிசில் துறை, பரிசில் நிலை, பரிசிலர், பரிசிலாளர் என்னும் சொற்களெல்லாம் மேற்குறித்த முச்சொற்களின் வழி வந்து பொருளிலக்கணப் பொருளாய்ச் சிறக்கின்றன. ஆகலின் அவற்றைத் தனித்தனி விளக்க வேண்டியதில்லையாம்.

பரிசு கொடைப்பொருள் தருதலானபின், தன்மை அல்லது குணம் என்னும் பொருளும் தருவதாயிற்று. கொடையால் புகழ் வருதலின் 'புகழ்' என்னும் பொருளும் அதற்கு உண்டாயிற்று. பரிசு பெருமைப்படுத்துவதாம் வகையாக அமைந்தமையால் 'வகை' என்னும் பொருளும் தந்தது.பரிசம் என்பது வட்டப் பெருந்தட்டாக அமைந்த ஓடம் ஆகலின் பரிசுக்கும் அப்பொருள் கண்டனர்.

“தக்கனும் எக்கனும் தம்பரிசு அழிய”

(திருவாசகம் 13 : 15) - இது புகழ்.