பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுவாயில்

'பேரகத்தியப் பெருந்திரட்டு' என்றும் 'ஐந்திறம்' என்றும் 19ஆம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டிலும் வெளிப்பட்டுள்ள இரண்டு நூல்களைப்பற்றிய ஆய்வு ஈதாகும்.

பேரகத்தியம் திரு. ச. பவானந்தரால் பதிப்பிக்கப்பட்டது. அதனை முதற்கண் வெளியிட்டவர் வேதகிரியார் என்பார் ஆவர்; களத்தூர் என்னும் ஊரினர் ; நாலடியார், திருக்குறள் பதிப்பாளர்; இலக்கணத் தொகை, நிகண்டு என்பனவும் வெளியிட்டவர்.

ஐந்திறம் 1981இல் நிகழ்ந்த, ஐந்தாம் உலகத் தமிழ்க் கழகத்தில் வெளியிடப்பட்டது. கருமாரி தாசர் எனப்படும் வீரபத்திரர் என்பவரால் மனத்தகத்துக் கிடந்து, மறைந்து போய்விட்டதாகச் சொல்லப்படும் பழைய ஐந்திற நூல் மக்கட்குப் பயன்பட வேண்டும் என வெளிப்பட்ட நூல் என்னப்படுவது.

பேரகத்தியப் பெருந்திரட்டு, உறையூர் முத்துவீர உபாத்தியாயர் இயற்றிய 'முத்து வீரியம்' எனப்படும் ஐந்திலக்கண நூலுக்குப் பிற்பட்டுத் தோன்றிய நூல் என்பதை நிறுவுகிறது இதன் முதற்பகுதி.

பேரகத்தியப் பாடல்கள் அனைத்தையும், ஒப்பிட்டுக் கண்டுகொள்வதற்காக முத்துவீரிய நூற்பாக்களையும் இணைத்தே காட்டப்பட்டுள்ளது.

முத்துவீரியத்தின் வழியில் பேரகத்தியம் நடையிடுகின்ற வகைகளையெல்லாம் படிமான வளர்ச்சியில் காட்டுவது அது.

ஐந்திறம் என்பது வெளிவந்த வுடனே, "அது பழம்பெரு நூல் என்று காட்டுமுகத்தான் வெளிப்பட்ட புது நூலே' என்று செந்தமிழ்ச் செல்வியில் தொடராக யான் எழுதி வெளிப்பட்ட கட்டுரையே 'ஐந்திறம்' ஆகும்.

இவ்விரண்டற்கும் உள்ள பொதுத் தன்மை, பழம் போர்வைக்குள் புகுந்துகொண்டு முகங்காட்டுதலாகும்.