பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

241

அவன் பருகுவன்; அவன் படிப்பன் என அன் ஈறு படர்க்கை ஆண்பாலுக்கே வரும். ஆனால், நான் பருகுவன்; நான் படிப்பன் என வழங்குதல் உண்டாயிற்று. இவ்வழக்கு வள்ளுவர் நாளிலேயே, "இரப்பன் இரப்பாரை எல்லாம்" எனத் தன்மைக்கு அன் ஈறு வந்துவிட்டது. வரவேண்டும் முறை நான் பருகுவென்; நான் படிப்பென் யான் இரப்பென் என்பனவாம்.

இன்னவை இன்னும் பல. இவ்வேறுபாடு ஏற்பட வேண்டும் எனின் தொல்காப்பியர்க்கும் திருவள்ளுவர்க்கும் சங்கச் சான்றோர்க்கும் நெடிய இடைவெளி இருத்தல் வேண்டும் என்பதேயாம்.

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை உகரத்தால் முடியும் சிறப்பின. எட்டு என்பதை அடுத்துத் தொண்டு என்றோர் எண் இருந்து வீழ்ந்துபட்டது. அவ்விடத்திற்கு எண்பதுக்குமேல் இருந்த ஒன்பது இறங்கிவிட்டது. மற்றை எண்களும் (தொண்ணூறு தொள்ளாயிரம்) என்பனவும் இறங்கிவிட்டன. தொல்காப்பியர் நாளில் 'தொண்டு' 'ஒன்பது' என்னும் இரண்டும் ஆட்சியில் இருந்தமை அறியமுடிகின்றது.

ஒன்பது என்பதற்கு இலக்கணமுடிபு கூறும் அவரே,ை (குற்.40) “தொண்டு தலையிட்ட” என ஆள்கிறார் (செய்.100) பரிபாடல் ஆசிரியரும், மலைபடுகடாம் ஆசிரியரும் தொண்டு என்னும் எண்ணைப் பயன்படுத்துகின்றனர். பின்னர் அவ்வழக்கு அழிந்தது.

இனி யாப்பு வகையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மறைவுகள் மிகப்பலவாம்.

தொல்காப்பியச் செய்யுள் இயலையும் காக்கை பாடினியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பவற்றையும் மேலோட்டமாக நோக்கினும் எளிதில் புலப்படும்.

சார்பெழுத்து மூன்று என்பது தொல்காப்பியம். அது பின்னே பத்தாகவும், 369 ஆகவும் பெருக்கிக் கொள்ளப்பட்டன. நேர், நேர்பு, நிரை, நிரைபு எனப்பட்ட அசைகள் நேர் நிரை என்ற அளவில் குறைந்தது.

எழுத்தை எண்ணிக் கொள்ளப்பட்ட குறளடி முதலியன சீர் எண்ணிக்கொள்ளும் நிலையை எய்தியது.