பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், பல் யானை செல்கெழு குட்டுவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், உதியஞ்சேரல் என்பார் ஆட்சி நிகழ்ந்தமைப் பதிற்றுப்பத்தால் அறியப்படுவ தாலும், அக்காலம் ஏறத்தாழ 200 ஆண்டுகளாம் எனப்பதிகத் தால் அறிய வருதலாலும் தொல்காப்பியர் காலம் கி.மு. விற்குப் பிற்பட்டது ஆகாது என்று உறுதிசெய்யலாம்.

கிரேக்கத்தில் இருந்து (யவனம்) அலெக்சாண்டர் (356-323) படையெடுப்பும், மெகசுதனிசு என்னும் யவனத்தூதர் கி.மு.320-298 வரை இந்தியாவில் இருந்ததை வரலாறு கூறுவதும், மௌரிய சந்திரகுப்தர் காலம் கி.மு.320-296 என அறியப் படுவதும் கொண்டு அக்காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியர் எனக் கொள்ளவேண்டும். பாணினியம் இயற்றிய பாணினியின் காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டு என்றும் 5 ஆம் நூற்றாண்டு என்றும் கூறப்படுவதாலும். பாணினி தம் இலக்கணத்தில் யவனம் என்னும் சொல்லை வழங்குவதாலும் அவர் காலத்தில் ஐநதிர நூல் வழக்கு ஒழிந்துவிட்டது என அறியப்படுதலாலும். அக்காலத்தில் கொற்கைமுத்து குறிக்கப்படுவதாலும், தொல்காப்பியர் காலம் கி.மு.4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு களுக்கு முற்பட்டமை அறியலாம். ஐந்திரம்

ஐந்திர வியாகரணம் இந்திரனால் அருக தேவர்க்கு உரைக்கப் பட்டது என்பது சிலப்பதிகாரத்தால் அறியப் படுதலாலும், அவ்வருகர் காலம் கி.மு.599-527 என அறியப்படுவதாலும், அவ்வைந்திரம் நிறைந்த தொல்காப்பியர் காலம், அக்காலத்திற்கு முற்பட்டதாக இருக்கவேண்டும். ஏனெனில் அருக சமயம் பற்றிய குறிப்பு எதும் தொல்காப்பியத்தில் இல்லை அறிந்துள்ளோம். கபாடபுரம்

என

முதற் கடல்கோளால் தென்மதுரை அழிந்தபின் நிலந்தரு திருவிற் பாண்டியனால் நிறுமிக்கப்பட்டதாம் இடைச்சங்கத்தில் அவன் கூட்டிய அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றமாயதாலும் தொல்காப்பியனார் கபாடபுரக் கழகத்தில் இருந்தாராக அறிதலாலும் கபாடபுர அழிவொடு இரண்டாம் சங்கம் நிறைவுற்றதாலும் தொல்காப்பியர் காலம் கபாடபுர அழிவுக்காலம் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டுவதாம்.