பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் -37

கட்டோடே விட்டொழியும்; நாடிகள் பத்தினையும் நன்றாக அறிந்துகொண்டால் பிணி அகலும்; எழுவகை அடிப் பொருளும் (தாது) அறிந்தவனே நல்ல பண்டுவன்; பத்துவகைக் காற்றுகளையும் அறிந்து கொண்டவனே ஆயுள் அறிந்தவன். ஆயுள் முறைப்படி பண்டுவம் பார்த்தால் நோய் அடியோடு அகலும்.

18. கற்புநிலை கூறல் : (170-175)

குதம்பாய், பொன்போலும் முப்பூவை உண்ணு முறையில் உண்டவர் ஊழியளவும் வாழ்வர்; நீறாதல் இல்லாத முப்பூவை விரும்பி உண்டவர் என்றும் அழிவின்றி வாழ்வர்; விந்தினைக் கட்டுப்படுத்தவல்லார், வெந்து அழிதலின்றி வாழ்வார். ஊன உடலம்விட்டு ஒளியுடலம் கொண்டவர் எல்லை இல்லாமல் காலமெல்லாம் வாழ்வர்; தோலுடல் நீக்கித் துலங்கும் ஒளியுடல் கொண்டவர் நஞ்சேனும் அமுதாக உண்ணவல்லவராம்; அழியும் உடலை மாற்றி அழியா மெய்யுடலம் கொண்டவர் கூற்றினையும் வெற்றி கொண்டு என்றும் வாழ்வார்.

19. திருத்தலங்கூறல் : (176-181)

குதம்பாய், பலப்பல கோயில்களைத் தேடிக் கும்பிட்டதால் வரும் பயன் ஏதேனும் உண்டோ? மனமாகிய திருக்கோயிலைப் போல் இறைவனுக்கு ஒரு கோயில் உண்டோ? உடலாகிய திருக்கோயிலில் இல்லாத இறைவர் பொய்யான திருக்கோயில் களில் உறைவாரோ? சிற்பவல்லார் கட்டிய கோயிற்குள்ளே, தானே ஆகிய முழுமுதல்வன் தங்குவானோ? தன்னால் படைக்கப் பட்டவன் படைத்த, அழியும் கோயில்களில் ஆண்டவன் உறைவானா? அன்பான அடியார் உள்ளமே ஆண்டவன் உறையும் இன்பமான திருக்கோயிலாம்!

20. தேவ நிலையறிதல் : (182-190)

குதம்பாய், உள்ளத்துள் உறையும் இறைவனைக் காணாமல், உலகில் உள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று அடைவதென்ன? இருக்கும் இடத்தில் இருந்தே காணற்குரிய இறைவனை எங்கெங்கும் தேடித்திரிவதென்னே அறியாமை? காசி என்றும் இராமேச்சுரம் என்றும் புகழ்ந்து சொல்லப்படும் தலங்களைத் தேடிச் சென்றாலும், இறைவனைக் காண இயலுமா? பூவுலகில் இடையீடின்றி நடந்தே திரிந்து தேடினாலும், தேவனைக் காண இயலுமோ? உள்ளங்கால் தேய்ந்து வெள்ளெலும்பு வெளிப்பட நடந்தாலும், வள்ளலாம் இறைவனைக் காணுவையோ?