பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் நூற்பா

உயிர்களுக்கு அமைந்துள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை அறிவு பெறுவதற்காக அமைந்த கருவிகள். ஆகலின் இவ்வைந்தையும் 'அறிகருவி' என்பர். இவற்றின் வேறாகச் சில கருவிகளும் உள. அவை வாய், கால், கை, மலவாய், நீர்வாய் என்பன. அவை பேசுதல், நடத்தல், புரிதல் முதலிய செயல்களுக்கு உரியவை. ஆதலால் அவற்றைச் 'செயற்கருவிகள்' என்பர். உயிர்கள் அறிவுறுதற்கும் செயலாற்றுவதற்கும் இவ் வறிகருவிகளும், செயற் கருவிகளும் இன்றியமையாதவை.

இவ்விருவகைக் கருவிகளும் உருவுடன் வெளிப்படத் தெரிபவை. இவ்வாறு ஒருவுடன் வெளிப்படத் தெரியாமல், அருவமாய்த் தோன்றும் உட்கருவிகளும் உள. அவற்றையும், நு ண்ணிய மெய்ப் பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்து இவையெனக் கூறியுள்ளனர். அவை, 'மனம், நினைவு, முனைப்பு, அறிவு' (மனம், சித்தம், அகங்காரம், புத்தி) என்பன.

.

மெய் முதலிய அறிகருவிகளின் வாயிலாகக் காணப்படு பவற்றைப் பற்றுவது, மனம்; அவற்றை இவை எனச் சிந்திப்பது, நினைவு; சிந்தித்தவற்றை இவையெனத் துணிவது, முனைப்பு; துணிந்தவற்றைத் தன்னிடத்து அமைத்துக்கொள்வது, அறிவு. வை ஒன்றின் ஒன்று வளர்நிலையில் அமைந்தவை.

அறிகருவி செயற்கருவிகளையுடைய உடற்பகுதி, உருமண்டலம்' என்றும், மணம், நினைவு,முனைப்பு, அறிவு ஆகிய உட்கருவிப் பகுதி, 'அறிவு மண்டலம்' என்றும் கூறப்படும். இவ்விரண்டையும் சேர்த்து 'ஆன்மவியல்' (ஆன்மதத்துவம்) எனப்படும். இவற்றின் வேறாகக் கலையியல் (வித்தியாதத்துவம்) இறையியல் (சிவதத்துவம்) என்பனவும் உண்டு.

கலையியல் நுண்ணுடலுக்கு உள்ளாய் உயிரைச் சூழ்ந்து நிற்பது என்றும், இறையியல் உயிர்க்கு மேலாய்த் திருவருள் தோய்வதற்கு வாயிலாக இருப்பது என்றும் மெய்ப்பொருள் கண்டார் கூறுவர்.