பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம் 37

இதனைத் "தம்முதல் குருவுமாய், தவத்தினில் உணர்த்த, ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனவிட்டு, அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே என இணைத்துப் பொருள்காணல் வேண்டுவதாம்.

தம்முதல் குருவுமாய் :

உயிர்கள், தமக்கு முதல்வனாகத் திகழும் இறைவனே, குருவுமாய் வந்தருளவும் பெறும் என்பது இதன் பொருள். ஆசிரியன் தன்னிடம் பயிலவரும் மாணவன் நிலைக்கு ஏற்ப இறங்கிவந்து கற்பிப்பது போலவும், தாய் தன் குழந்தையின் தளர்நடைக்கு ஏற்பத் தானும் தளர்நடையிட்டு அணைத்துச் செல்லுதல் போலவும், இறைவன் உயிர்களின் பக்குவநிலைக்கு ஏற்பக் குருவனாக வந்தும் திருவருள் நோக்காலும் திருவருள் வாக்காலும் பாலிப்பான் என்பதாம்.

தவத்தினில் உணர்த்த :

எல்லா உயிர்களுக்கும் குருவனாக வந்து இறைவன் உணர்த்துவனோ என வினாவுவார்க்கு மறுமொழியாகத் 'தவத்தினில் உணர்த்த' என்றார். பக்குவநிலையுற்ற ஆன்மாவுக்கே உணர்த்துதற்குக் குருவாக வருவன் இறைவன் என்றாராம்.

உலகியல் அறிவுச் செய்தியையே பக்கும் அறியார்க்குச் சொல்லுதல் இல்லையாகக் காண்கிறோம் அல்லவோ! எல்லாச் செய்திகளையும் எல்லாரிடத்தும் சொல்லுகின்றோமோ? பொதுமக்கள் செய்தியும் புலமக்கள் செய்தியும் ஒன்றாக இருப்பது இல்லையே! கீழ்நிலை அரிவரிக் கல்விக்கும் மேலை நிலை ஆய்வுக் கல்விக்கும் எத்துணை இடைவெளி? அவையறிதல் என்பது கேட்பார் நிலையறிந்து பேசுதல் அன்றோ! அவ்வாறாக இறைவன் குருவனாக வந்து அருளுதல் தவமுடையார்க்கு வாய்க்கும் என்றார். 'தவமும் தவமுடையார்க்கே ஆம்' என்றார் திருவள்ளுவர். தவத்தோர்க்கே இறைவன் குருவனாக வரப்பெறும் பேறு வாய்க்கும் என்றார் மெய்கண்டார். தவப்பேறு உடைமை யாலேதான் உணர்த்தவருமான் இறைவன் என்பதாம்!

இனித் தவப்பேறுதான் என்ன என்பார்க்கு, "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்குரு" என்பது தமிழ்நெறி. தன்துயர் பொறுத்தலும் பிறவுயிர்க்குத் துயர் செய்யாமையுமே உருவாக உடையது தவம் எனின், அத்தவம் உடையானே செந்தண்மை அந்தணன் அல்லனோ!