பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

229

அவனே தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் அல்லனோ! அவனுக்கு இறைவன். 'புறம்புறம் திரியும் செல்வனாக' இருக்கும் போது குருவனாக அருள் பாலித்தல் அரிதன்றே!

கரட்டு நிலத்தே எவரே விதைப்பார்? காதுகொடுத்துக் கேளானுக்கு எவரே உரைப்பார்?

இறைவன் குருவனாய் என்ன உணர்த்துவன்?

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென (உணர்த்த) :

வேந்தன் மகன் ஒருவன் வேடரிடையே வளர்ந்து, தன்னை வேந்தன் மகன் என்பதைச் சிறிதும் உணரானாய் அவ்வேடன் உண்பன உண்டு, உடுப்பன உடுத்து, செய்வன செய்து, வளருமாறு வளர்வது போல, நீயும் ஐம்புலங்களாகிய வேடர்களிடேயே உன்னை மறந்து வளர்கின்றாய்; வேந்தன் மகன் தன்னை வேந்தன் மகன் என்பதை உணராது மயங்கிக் கிடப்பது போல, நீயும் ஐம்புல வேட்டைக் காட்டில் வேட்டையாடி அதிலேயே தோய்ந்து உன் அரிதில் அரிதாம் மானிடப் பிறப்பை மறந்தாய்; நீ செயற்கருஞ் செயல் செய்தற்கு உரிமையாளன்; உன்னை அறி; உடனை உடையானை அறி; உண்மை அறி என்று அறிவுறுத்திய காலை அவன் அறிவறிந்து மெய்யுணர்வு பெறுவன் என்பதாம்.

ஆதன், தன்னை அறியா நிலையில் புலங்களின் குறும்பு கட்கு ஆட்பட்டு, 'புலக்குறும்புகளுக்கு ஆட்பட்டுளேன்" என்னும் எண்ணம் தானும் இல்லாமல் மயங்கிக் கிடத்தலை அறிந்தே 'அயர்ந்தனை' என்றும், அந்நிலையிலேயே தடிப்பேறி மேலும் மேலும் தோய்ந்து நிற்றலால் 'வளர்ந்து' என்றும் ஆசிரியர் உரைத்தார். "அடிமையுள் அடிமை, தான் அடிமை என்பதும் உணராத அடிமை" அல்லவோ! அவ்வடிமையே பெருமை என நினைவது அதனினும் வடிகட்டிய அடிமைநிலை அல்லவோ! 'உணர்ச்சி வாயில் உணர்வோர் வலிததே' என்னும் தொல்லாசிரியர் நல்லுரை போற்றத்தக்கதாம்.

ஆதன், பக்குவ நிலையறிந்து நற்குருவன் அவனை நண்ணி அவனுக்கு அருளுரைக்கப் பெறுவன் என்பதாம். அருளுரை பெற்ற பக்குவன் என செய்வன் என்பார்க்கு மேலே விளக்குவார். விட்டு, அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே :

விட்டு என்பது நீங்கி, விலகி என்னும் பொருள் தருவது ஆயினும், 'உணர்த்தவிட்டு' என்று முற்சொல்லோடு இணைந்தும், 'விட்டு அன்னியம் இன்மையின்' என வருஞ்சொற்களோடும்