பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாம் நூற்பா

உயிர்க்குத்

மலத்தாலும் மாயையாலும் கட்டுண்ட தன்முனைப்பு மிக எழும். அத் தன்முனைப்பு 'நான் எனது என்னும் செருக்காகக் கிளரும். நான் என்னும் செருக்குள்ள இடத்திலே பிறரொருவர் ஒட்டுதற்குக் கூடுமோ? பிறரொடு ஒட்டி ஒழுகுதற்கு அச்செருக்குத் தானும் இடந்தருமோ? நான் என்னும் செருக்கை, இருக்கையாக்கி அமர்ந்தான் ஒருவன். தானே அவ்விடத்தன்றி பிறரொருவர்க்கு இருக்க இடந் தாரான். ஆனால் தன் முனைப்பாம் நான் ஒழித்தவனோ, தன் உள்ளமாம் இருக்கையில் உலகெல்லாம் இருக்க இடந்தருவான். உலகத்தை ஆங்கு இருத்தி உழுவலன்புடைய ஊழியனாகப் பணிபுரிந்தும் உவப்புறுவான்.

இனி 'எனது' என்பதோ பற்றுமை, இவறன்மை, கருமித்தனம் என்பவற்றின் கூட்டுறவால் அமைவதாம். எல்லாம் தனக்கே தனக்கே என்னும் தன்னலப் பேய்வெறியால் அரவணைக்கப்பெற்றுப் பிறவிப்பயனும் எய்தானாய்ப் பிறர் நலமும் பேணானாய் வறிதே ஒழிகின்றான். இவ்வாறு நான் என்றும் எனது என்றும் கொள்ளும் செருக்கை ஒழிக்காத நிலையில் நற்பேறு எய்தல் அரிது என்றும், அவற்றை ஒழித்தார் தெய்நிலையுறுவர் என்றும் திருவள்ளுவர் தெளிவிப்பார்.

"யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்"

என்பது அவர் வாக்கு.

யான் என்னும் செருக்குறையும் இடத்து இறைமை இறைப்பொழுதேனும் (நொடிப்பொழுதேனும்) இருத்தற்கு இடமுண்டோ? ஊனைத் திருக்கோயிலாக்கி, உணர்வை வழிபாடாக்கி, தொண்டை வணக்கமாக்கிக் கொண்டார்க்கே இறையருள் ஒன்றி உடனாகி நிற்கும் பேறு வாய்க்கும்? அந்நிலையை உயிர் எய்துதலை இயம்பி வழிகாட்ட எண்ணும் மெய்கண்டார், இப்பத்தாம் நூற்பாவில் அந்நெறிமுறைகளை முறைபெற ஓதுகின்றார்: