பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

105

என்பது ஆற்றின் பெயர். அஃது அண்ணாமலைக்கு வடபால் ஓடுவது; பொய்யுறக்கம் கொள்ளும் நீ, மெய்யாகவே உறங்காத என் நிலைமையைத் தலைவற்குக் கூறு எனத் தூதுரைத் தாளாம். நாரை நெய்தற் கருப்பொருள் ஆகலின் இரங்கல் உரிப்பொருளுக்கு உரிமையாயிற்று. (36)

37. போகாத ஊர்க்கு வழிதேடுவார் தோழி தலைவிக்கு உரைத்தல் கட்டளைக் கலித்துறை

ஏகார் புனத்துத் 'தழையாற் கரிபட்ட' தென்பரென்றும் போகாத ஊர்க்கு வழிதேடு வார்புலிக் கான்முனியும் நாகா திபரும் தொழும்அரு ணாசல நாட்டிலிளம்

தோகாய்! அணங்கனை யாய்!அவர்க் கேது சொலத்தக்கதே.

(பொ-ரை.) வியாக்கிர பாதர் என்னும் புலிக்கால் முனிவரும், பதஞ்சலியார் என்னும் நாகாதிபரும் தொழும் அண்ணாமலை நாட்டில் இளமயில் போன்றவளே, தெய்வமகள் போன்றவளே, தினைப்புனத்தை விடுத்துச் செல்லார், தம் கையில் கொண்ட தழையால் யானை வீழ்த்தப்பட்டது என்பார்; அன்றியும் தாம் என்றும் போகாத ஊருக்கு வழி கேட்டு ஆராய்வார்; இத் தன்மையுடைய அவர்க்கு யான் சொல்லத் தக்கது யாது? சொல்வாயாக.

(வி-ரை) தழையுடன் வந்து புனம்விட்டு அகலாத தலைவன் நிலையைத் தோழி, தலைவிக்கு எடுத்துரைத்து அவள் வாய்மொழி கேட்க விழைந்தது இது. இறைவன் திருநடங்கண்டு அகலா தவர்கள் புலிக்கால் முனிவரும் நாகாதிபரும் ஆவர். அவர்கள் முறையே வியாக்கிரபாதர், பதஞ்சலியார் என அழைக்கப் பெறுவர். நாகாதிபர் என்றது ஆதிசேடனை; அவனே பதஞ்சலியாராக வந்தான் என்பது கதை.

தலைவன் புனத்தில் உலாவுவதும், உரைப்பதும், வினாவுவதும் ஒன்றற்கொன்று தொடர்பற்றன ஆகலின் அவள் நோக்கம் வேறாகும்; அதனைக் கூறுக என்றாளாம்.(37)