பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

58. இந்திரன் பொருள்கள் தலைவன் தலைவியைப் புகழ்தல் அறுசீர் ஆசிரியவிருத்தல்

புடைசெறிந் தளிபாடும் இதழியம்

தொடைமார்பர் புலிபதஞ் சலிநாடுவார்

மடைஇளம் கயல்தாவும் அருணையங் கிரிமீது மலர்அணங் கெனமேவுவார் நடையுமிந் திரவேழம்; இருகைஇந் திரதாரு; நயனம்இந் திரநீலமே; இடையுமிந் திரசாலம்; நுதலும் இந்

திரசாபம்; இதழும்இந் திரகோபமே.

125

(பொ-ரை) பக்கங்களில் மொய்த்து வண்டுகள் பாடும் அழகிய கொன்றை மாலையணிந்த மார்பினரும், புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் வழிபடுபவரும் ஆகிய அண்ணாமலையாரது, நீர் பாய்கின்ற மடைகளில் இளமை பொருந்திய கயல்மீன்கள்தாவும் அழகிய அண்ணாமலையின் மேல் திருமகள் எனத் திகழும் தலைமகள் நடையும் இந்திரன் யானையாம் ஐராவதம் போன்றது; இரண்டு கைகளும் இந்திரன் உலகக் கொடை மரமாகிய கற்பகம் போன்றன; கண்களும் இந்திர நீலக் கற்கள் போன்றன; இடையும், இந்திரசால வித்தை போலப் பொய்யானது; புருவமும் இந்திர வில்லாகிய வானவில் போன்றது; இதழும் இந்திர கோபப் பூச்சி போலச் செவ்வியது ஆகும்.

(வி-ரை) தலைவியின் எழிலை இந்திரன் தொடர்பான பொருள்களைக் கொண்டே வெளிப்படுத்தினான் தலைவன்; இந்திரன் என்னும் சொல்லும் பொருளும் பல்கால் மீண்டும் வந்தமையால் இது சொற்பொருள் பின்வரு நிலையணி யாகும். இதில் 'ஆகும்' என ஒரு சொல் வருவித்து உரைக்கப் பெற்றது. புடை - பக்கம்; அளி - வண்டு; புலி, பதஞ்சலியரை முன்னும் கூறினார்.(27) (58)