பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

189

இறைவன் அடியை அடைவதற்காக அரும்பாடுபட்டு வருந்தினர்.

'அடியார் அடிக்கு வருந்தினர்' எனக்கண்டு நயமுணர்க. மேல் - மேன்மையான; மேனாளில்; உடல். 'அடிக்கு மேல் வருந்தினர்' என மாற்றிக் கூட்டுக.

16. வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்தது

(அரபத்தர் என்னும் முனிவர் கட்டளையை ஏற்றுக் கொண்டு மதுரைக்கு வந்த கண்ணுவர் முதலிய முனிவர்க்கு இறைவன் வேதப்பொருள் அருளியது.)

நான்கா ரணப்பொருளாய் நற்றவர்முன் உற்றகுரு நான்கா ரணப்பொருளா நம்புசொக்கன் அம்மானை; நான்கா ரணப்பொருளா நம்புசொக்கன் ஆமாகில் தான்குருவாய்க் கக்குவதேன் சாரமெலாம் அம்மானை; சாரங்கக் கையனன்றோ தன்னாமம் அம்மானை.

(பொ-ரை) நான்கு வேதங்களின் உண்மைப் பொருளை ஆராயும் நல்ல தவத்தோர் முன்வரும் குருவானவர், நான்கு வேதங்களின் உண்மைப்பொருள் இவனே என்று நம்பப் படுபவன் சொக்கனேயாம் அம்மானை; நான்கு வேதப்பொருளாக நம்பப்படுபவன் சொக்கனே ஆயினால் அவனே குருவாக வந்து வேதத்தின் சாரத்தையெல்லாம் கண்ணுவர் முதலிய முனிவர்க்கு மொழிந்தது ஏன் அம்மானை. அவன் பெயர் 'சாரங்கக் கையன்' என்பதன்றோ அம்மானை.

(வி - ரை) வேதப்பொருளாக இருக்கும் தானே வேதப் பொருள் உரைத்தது என்ன எனின், அவன் வேதத்தின் சாரத்தையும், அதன் அங்கத்தையும் (வேதம், வேதாங்கம்) கைக் கொண்டவன். ஆதலால்,

-

-

சாரங்கக்கையன்: 'சாரங்கம் கையன் எனப் பிரித்துச் 'சாரங்கம் - மான்; கையன் கையில் கொண்டவன் என்னும் பொருளும் காண்க. 'சாரம் கக்கு ஐயன்' ஆதலால் கக்கினான் எனவும் கொள்க. கக்குதல் என்பது இலக்கணையாய்க் கூறுதலைக் குறித்தது.