பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. கண்டு கேட்டு

"பாட்டினிமை மிக நன்று.

ஆயினும், இவ்வினிமையின் பொருட்டு உணவு இறங் காமையும் இரவு கழியாமையும் நினைந்து நெட்டுயிர்ப்பு விடுதலும் ஆகிய இவை போல்வன நிகழ்வதில்லை.

அறுசுவை உணவு நன்று.

ஆயினும், அவ்வுணவின் மேல் வந்த விருப்பத்தால் ஒரு மகளுடைய வளைகள் கழலுமோ? அவளது மேனி பசக்குமோ? அவன் தன்னந்தனியளாய்த் தாய் தந்தையரை விட்டு வெய்ய சுரங்கடந்து வேற்றூர் செல்ல உடன்படுவளோ?

கண்ணிற்குக் குளிர்ந்த காட்சி ஒன்றை நாடி ஒரு மகன் நள்ளிரவிற் காடு மலையுங் கடந்து, கரடி புலிகளை எதிர்த்துத் தன் உயிரிற்குத் தீங்கிழைத்துக் கொள்ள முன்வருவானோ? இல்லை!

இவை ஒவ்வொரு புலனுக்கு நன்மை பயப்பன ஆதலால் அவற்றின் மேலுள்ள விருப்பம் எவ்வளவு வலியுடைத்தாயினும் பொதுவாக மக்களை மயக்கித் தம்மறிவு கெட்டுத் தடுமாறச் செய்வதில்லை.

புணர்ச்சியின்

மேலுள்ள விருப்பமும் இத்தகைய ஒன்றானால் மக்களதை எளிதில் அடக்கிக் கொள்ளக்கூடும். அவ்வாறாயின் இயற்கையின் அமைப்பாகிய உயிர்வளர்ச்சி தடைபட்டு நின்றுவிடும்.

உயிரென்பது ஒன்றினின்றும் மற்றொன்றற்றிற்கு ஊட்டப் படுமேயன்றி ஆக்கப்படாது.

ஊட்டப்படுவதற்குக் கூட்டம் வேண்டும். ஆதலின் கூட்டத்தின் மேலுள்ள இவ்விழைவு ஒரு புலனைச் சார்ந்து நில்லாது ஐம்புலன்களிலும் கூடிநின்று ஆற்றின் மேற் புணையென மக்களை வலித்துச் செல்கின்றது.